தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குப்பை அகற்றப்பட்டது
ஆற்றூர் பேரூராட்சி அலுவலகம் முன் பகுதியில் பத்மநாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஆற்றூர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை அதற்கான இடத்தில் கொட்டாமல், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அடிப்பகுதியில் கொட்டினார்கள். இதனால் துர்நாற்றம் வீசியது. இது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் குப்பை அகற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்
நாகர்கோவில் இடலாக்குடி அங்கன்வாடி மையத்தின் அருகில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, அந்த வழியாக வாகனத்தில் செல்பவர்களுக்கும் பெரும் சிரமமாக உள்ளது. எனவே அந்த மின்கம்பத்தை சாலையின்் ஓரத்தில் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்
வீணாகும் குடிநீர்
நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிநீருக்காக திண்டாடி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஏ.ஆர்.கேம்ப் சாலையில் வட்டக்கரைக்கு செல்லும் திருப்பம் அருகில் குடிநீர் குழாயின் வால்வில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் அதில் இருந்த கடந்த சில நாட்களாக குடிநீர் வெளியேறி வீணாகி கொண்டு இருக்கிறது. எனவே வால்வை சரி செய்து குடிநீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, குருசடி.
தெருவிளக்கு எரியவில்லை
ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு காஞ்சிரவிளை மற்றும் சாமவிளை பகுதிகளில் தெரு விளக்குகள் உள்ளன. அந்த தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுஜின், சாமவிளை.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டில் கார்த்திகை வடலியில் இருந்து சின்னகுளம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த வழியாக ஏராளமானவர்கள் செல்கிறார்கள். அவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.சந்திரராஜன், கார்த்திகைவடலி.
துர்நாற்றம் வீசும் சந்தை
தக்கலை பேட்டை சந்தைக்கு தக்கலை மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து காய்கறி மற்றும் மீன், இறைச்சி வாங்கி செல்வது வழக்கம். ஆனால் இந்த சந்தையில் இறைச்சிக்கூடம் அருகே ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கெட்டு போன காய்கறிகள் போன்றவை கொட்டப்படுகிறது. அவை உடனுக்குடன் அகற்றப்படுவது இல்லை. இதனால் சந்தையில் துர்நாற்றம் வீசுகிறது. காய்கறி வாங்க சந்தைக்கு வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சந்தையில் சேரும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஞ்சித், தக்கலை.
ஜல்லிகளால் விபத்து
அருமனை-ஆறுகாணி சாலையில் ஆங்காங்கே தோண்டி ஜல்லிகளை நிரப்பி உள்ளனர். பல நாட்கள் ஆகியும் தார் சாலை போடவில்லை. இதனால் ஜல்லிகளில் வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே மேலும் தாமதிக்காமல் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேந்திரன், களியல்.
Related Tags :
Next Story