மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க அதிகாரிகள் குழு ஆய்வு


மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க அதிகாரிகள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 28 Sept 2021 3:40 AM IST (Updated: 28 Sept 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

புதுக்கடை:
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் 
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் நுழைவு வாயிலில் படகுகள் அலையில் சிக்கி விபத்துக்குள்ளாகி அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு துறைமுக தூண்டில் வளைவின் கட்டுமான அமைப்புதான் காரணம் என மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே துறைமுகத்தின் முகத்துவாரத்தை நீட்டித்து அமைக்கவேண்டும், மணல்மேடுகளை அகற்ற மணல் அகற்றும் எந்திரத்தை நிறுவ வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆய்வு நடத்த தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி ரமணமூர்த்தி, மத்திய அரசு நீர்மின் நிலைய ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பிரபாசந்திரன் மற்றும் அதிகாரிகள்  கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு வந்தனர். அவர்கள் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலத்தில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
நேரில் ஆய்வு 
இந்த குழுவினர் நேற்று தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மீனவப் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.  
அப்போது, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி கூறும்போது, தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றும் அனுபவமிக்க மீனவர்களை குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பின்னர் அதிகாரிகள் கூறும் போது, இந்தத் துறைமுக மறு சீரமைப்பு பணிகள் மீனவ மக்களின் விருப்பப்படி நடைபெறும் என்றனர். இந்த ஆய்வுப் பணியில் தலைமைப் என்ஜினீயர் ராஜு, மத்திய அரசு நீர்மின் நிலைய ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பிரபாசந்திரன், ராஜீவ் குமார் சவுத்ரி, விஞ்ஞானி டாக்டர் சுரே‌‌ஷ், செயற்பொறியாளர் முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மீன்பிடித் துறைமுக மேலாண்மை சங்கத்துடன் ஆலோசனை நடத்தினர்.

Next Story