விவசாயிகள் பருத்தி விதைப்பண்ணை அமைத்து பயனடையலாம் விதைச்சான்று உதவி இயக்குனர் அசோகன் யோசனை


விவசாயிகள் பருத்தி விதைப்பண்ணை அமைத்து பயனடையலாம் விதைச்சான்று உதவி இயக்குனர் அசோகன் யோசனை
x
தினத்தந்தி 28 Sept 2021 6:02 PM IST (Updated: 28 Sept 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பருத்தி விதைப்பண்ணை அமைத்து பயனடைய விதைச்சான்று உதவி இயக்குனர் அசோகன் யோசனை தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து பருத்தியில் சான்று விதை உற்பத்தி செய்து பயன்பெறலாம் என்று விதைச்சான்று உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பருத்தி
பருத்தியில் சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட வேண்டிய ரகத்தின் விதைகளை வேளாண்மைத்துறையின் பரிந்துரைப்படி விதைப்பு செய்ய வேண்டும்.
விதைப்பு செய்த 35 நாட்களுக்குள் தூத்துக்குடி விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அல்லது ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். விதைத்த 75 மற்றும் 105வது நாட்களில் விதைச்சான்று அலுவலரால் விதைப்பண்ணையின் தரம் நேரில் ஆய்வு செய்யப்படும்.
ஆய்வு
வயலாய்வின்போது விதை உற்பத்தியாளர் உடனிருப்பது நல்லது. 140வது நாளில் அறுவடைக்குப்பின் பஞ்சு நீக்கப்பட்டு விதைகள் சுத்தம் செய்யப்படும். இதில் இருந்து விதை மாதிரி எடுக்கப்பட்டு விதைப்பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி முளைப்புத் திறன், சுத்தத்தன்மை, ஈரப்பதம் ஆகியவை பரிசோதிக்கப்படும். பரிசோதனையில் தேறும்பட்சத்தில் விதைகள் 4 கிலோ துணிப்பைகளில் நிரப்பப்பட்டு சான்றட்டை விதைச்சான்று அலுவலரால் பொருத்தப்படும். சான்று வழங்கப்பட்ட விதைகள் விவசாயிகளுக்கு வினியோகத்துக்கு உற்பத்தியாளரால் அனுப்பப்படுகிறது.
எனவே பருத்தியில் விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகள் உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக உதவி விதை அலுவலர்கள் அல்லது தனியார் விதை உற்பத்தியாளர்களை அணுகி விவரம் பெற்று விதைப்பண்ணை அமைத்துப் பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story