மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணி வழங்க வேண்டும்
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் ஆஷா திட்டத்தில் அவசர கால மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, மலைக்கிராமங்களில் கர்ப்பிணிகள் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மக்களை தேடி மருத்துவ திட்ட பணிகளையும் தங்களுக்கு வழங்கும்படி ஆஷா திட்ட பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆஷா திட்ட ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் தமிழ்நாடு ஆஷா ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகனா, செயலாளர் கே.ஆர்.கணேசன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பல மாவட்டங்களில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் ஆஷா ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆஷா திட்ட ஊழியர்களை பயன்படுத்த வேண்டும். அதற்கு தனியாக ஊழியர்களை நியமிக்க கூடாது. மேலும் ஆஷா திட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் இறக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம், கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
வருங்கால வைப்புநிதி மற்றும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் ஊழியர்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story