தூத்துக்குடி மாநகராட்சியில் உயிரி கழிவுகளை உரமாக்கும் செயல்முறை பயிற்சி ஆணையாளர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சியில் உயிரி கழிவுகளை உரமாக்கும் செயல்முறை பயிற்சி நடந்தது
தூத்துக்குடி, செப்.29-
தூத்துக்குடி மாநகராட்சியில் உயிரி கழிவுகளை உரமாக்கும் செயல்முறை பயிற்சி நடந்தது. பயிற்சியை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
பயிற்சி
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து மாநகராட்சி உயிரி கழிவுகளை உரமாக்கும் செயல் முறை குறித்து தூய்மை பணியாளர்களுக்கான பயிற்சி நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சங்கரன் தலைமை தாங்கினார். மண்ணியல் துறை இணை பேராசிரியர் பாக்கியத்து சாலிகா பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். மண்ணியியல் துறை தலைவர் சுரேஷ் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாநகர நல அலுவலர் வித்யா பேசினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
கழிவுகள்
அப்போது அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தினமும் சுமார் 180 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த கழிவுகளில் 73 டன் கழிவுகள் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 நுண் உரம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.
மீதம் உள்ள கழிவுகள் குப்பை சேமிப்பு கிடங்குக்கு அனுப்பப்படுகிறது. நுண் உரம் செயலாக்க மையங்களில் உயிர் கழிவுகளை ஒருமுறை சுழற்சி செய்து கம்போஸ்ட் உரமாக மாற்ற குறைந்தபட்சம் 45 முதல் 60 நாட்கள் வரை ஆகிறது. இதனால் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை முழுமையாக கையாள அதிகப்படியான இடம் மற்றும் மூலதன முதலீடு தேவைப்படுகிறது.
ஆகையால் இதனை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
அதன்படி கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நகராட்சி உயிரி கழிவுகளை உரமாக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில் 30 நாட்களுக்குள் உரம் தயாரிக்க முடியும். இதனால் பரிட்சார்த்த முறையில் சில மையங்களில் கல்லூரி சார்பில் உரம் தயாரிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
செயல்முறை விளக்கம்
பயிற்சியில் அங்க கழிவுகளை உரமாக்கும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற உயிரி தொழில்நுட்ப முறைகள், தூத்துக்குடி மாநகராட்சி நுண் உரமாக்கும் மையங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து செயல்முறை விளக்கங்கள் காண்பிக்கப்பட்டன.
பயிற்சியில் மாநகராட்சி அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் லெனின்ராஜா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story