வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து புலி தப்பியது
வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து புலி தப்பியது
கூடலூர்
4-வது நாளாக பிடிக்கும் பணி
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி தேவன்-1 பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 51) என்ற தனியார் தோட்ட தொழிலாளியை கடந்த 24-ம் தேதி புலி ஒன்று தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் தேவன்-1 பகுதியில் பதுங்கியிருந்த புலி தேயிலைச் செடிகள் வழியாக மேபீல்டு பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கு மேய்ச்சலுக்கு நின்று கொண்டிருந்த 2 பசு மாடுகளை கடித்து கொன்றது.
அதன் பின்னரே புலி இடம்பெயர்ந்து சென்றது வனத்துறைக்கு தெரியவந்தது. இதனிடையே புலியை பிடிப்பது குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற கேரள வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து சிறப்பு பாதுகாப்பு கவச உடைகளை அணிந்தபடி கேரள வனத்துறையினர் கூடலூர், முதுமலை துறையினருடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் புலி வனத்துறையினரின் நடமாட்டத்தை அறிந்து பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தது.
நேற்று 4-வது நாளாக மேபீல்டு தனியார் எஸ்டேட் பகுதியில் மயக்க ஊசி செலுத்தும் கால்நடை டாக்டர்கள், வன அதிகாரிகள், கேரள வனத்துறையினர் என 100-க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
புலியை சுற்றி வளைத்தனர்
அப்போது எஸ்டேட்டின் பள்ளத்தாக்கான பகுதியில் புதர்களுக்கு இடையே புலி பதுங்கி இருப்பதை கண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு குறிப்பிட்ட இடங்களைச் சுற்றி வெளியாட்கள் யாரும் நுழைந்து விடாதபடி பாதுகாப்பு போடப்பட்டது.
தொடர்ந்து வனத்துறையினர் புலி பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். ஆனால் சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் புதர்களுக்கு இடையே புலி இருந்தது. இதனால் அங்கிருந்து புலியை வெளியே விரட்டும் வகையில் வனத்துறையினர் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதைக் கேட்ட புலி மிகவும் பயங்கரமாக உறுமியது. தொடர்ந்து வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால் புதர்களை விட்டு வெளியே செல்லும் வகையில் ஒவ்வொரு பகுதிக்கு இடம்பெயர்ந்தது. மேலும் வனத்துறையினரும் அதை பின்தொடர்ந்து சென்றனர்.
இதற்கு ஏற்ப மேடான இடத்துக்கு புலி வந்தவுடன் மயக்க ஊசி செலுத்துவதற்காக கால்நடை டாக்டர்கள் தயாராக நின்று இருந்தனர். அப்போது சிறப்பு பயிற்சி பெற்ற கேரள வனத்துறையினர் புலியை நெருங்கினர்.
புலி தப்பியது
அப்போது வாக்கி டாக்கி மற்றும் பைனாகுலர் மூலம் வன அதிகாரிகள் புலியின் நடமாட்டத்தை ஆங்காங்கு நிறுத்தி வைத்துள்ள வன ஊழியர்களுக்கு தெரிவித்தனர். மேலும் புலி எந்த திசைக்கு சென்றாலும் உடனடியாக மயக்க ஊசி செலுத்தும் வகையில் மேடான பகுதியில் நின்று வன அதிகாரிகள் தகவல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இதனால் புலி வனத்துறையினரிடம் சிக்கிவிடும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத சமயத்தில் பகல் 2.45 மணிக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து புலி தப்பியது.
இதைக்கண்ட வனத்துறையினர் மயக்க ஊசிகளுடன் பின்தொடர்ந்து சென்றனர். மேலும் ரோந்து வாகனத்தில் சென்று புலியை பிடிக்க முயன்றனர். ஆனால் புலி அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் வனத்துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். முன்னதாக அப்பகுதியில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் புலியை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, புலி மீண்டும் அப்பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு புலி பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story