திருச்செந்தூரில் 2 மனைவிகளுக்கு கத்திக்குத்து மருத்துவ உதவியாளருக்கு போலீசார் வலைவீச்சு


திருச்செந்தூரில் 2 மனைவிகளுக்கு கத்திக்குத்து மருத்துவ உதவியாளருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Sept 2021 9:27 PM IST (Updated: 28 Sept 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் 2 மனைவிகளை கத்தியால் குத்திய மருத்துவ உதவியாளரை போலீசார் தேடிவருகின்றனர்

திருச்செந்தூர், செப்.29-
திருச்செந்தூரில் தனது 2 மனைவிகளையும் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ உதவியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மருத்துவ உதவியாளர்
திருச்செந்தூர் நந்தவன தெருவை சேர்ந்தவர் சந்தானம். இவர் பிச்சிவிளை ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய முதல் மனைவி சசிகலா (வயது 28). இவர் திருச்செந்தூர் எஸ்ட்ஸ் தடுப்பு மையத்தில் பணியாற்றி வருகிறார். சந்தானமும், சசிகலாவும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா கணவரை பிரிந்து, திருச்செந்தூர் வடிகால் தெருவில் உள்ள பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார். 
2வது திருமணம்
இந்நிலையில் சந்தனம் சாத்தான்குளம் புதுகிணறை சேர்ந்த கணேசன் மகள் மாலதி (20) என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் மாலதியுடன் சந்தானம் திருச்செந்தூர் நந்தவனம் தெருவில் வசித்து வருகிறார். ஆனால் சந்தானம் அடிக்கடி முதல் மனைவி சசிகலா வீட்டிற்கு சென்று, தன்னுடன் வாழ வருமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவும் சசிகலா வீட்டிற்கு சென்ற சந்தானம், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சசிகலா வரமுடியாது என்று சொல்லியுள்ளார். 
மனைவிகளுக்கு  கத்திக்குத்து
அதில் ஆத்திரம் அடைந்த சந்தானம், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி தனது வீட்டுக்கு ஓடியுள்ளார். அங்கு இருந்த 2-வது மனைவி மாலதியையும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த சசிகலாவும், மாலதியும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், இருவரும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சந்தானத்தை தேடிவருகிறார்.

Next Story