வனத்துறையினரை கண்டித்து மலைக்கிராம மக்கள் மறியல்
சாலை அமைக்க அனுமதி வழங்காததால், வனத்துறையினரை கண்டித்து மலைக்கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளம்:
40 ஆண்டுகால போராட்டம்
பெரியகுளம் அருகே போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகமலை ஊராட்சி உள்ளது. இங்கு ஊரடி, ஊத்துக்காடு, கருங்கல் பாறை, குறவன்குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு செல்வதற்கு போதிய சாலை வசதி கிடையாது.
இதனால் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் மலைப்பகுதிகளில் விளையும் பொருட்களை குதிரைகள் மூலமாக கொண்டு செல்கின்றனர். எனவே மலைக்கிராமங்களில் சாலை வசதி செய்து தரக்கோரி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலைக்கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மலைக்கிராம மக்கள் மறியல்
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, சோத்துப்பாறை அணை பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் வரை புதிதாக சாலை அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு முதற்கட்டமாக, ரூ.29 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி சாலை அமைக்கும் பணி தொடங்க இருந்த நிலையில், பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தக்கூடாது என்று வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
சாலை அமைக்க அனுமதி வழங்காத வனத்துறையினரை கண்டித்து, சோத்துப்பாறை அணையின் முன்பு பெரியகுளம் சாலையில் மலைக்கிராம மக்கள் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் உண்ணும் போராட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை போலீசார் மற்றும் வனத்துறையினர் மலைக்கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை அமைக்க அனுமதி அளிக்கும் வரை தாங்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக மலைக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் மலைக்கிராம மக்கள், சாலையில் சமையல் செய்து உண்ணும் போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு மலைக்கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story