விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பான முறையில் வைத்திட வேண்டும் தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் டி.மோகன் அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பான முறையில் வைத்திட வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் டி.மோகன் அறிவுரை கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் அலுவலர்களுக்கான (நோடல்) ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கி வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் தற்போது வரை ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளையும், பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளையும் கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பொறுப்புடன் தேர்தல் விதிகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும், எந்த வாக்குச்சாவடி மையத்தில் எந்த இடத்தில் வாக்குப்பெட்டி வைக்கப்பட வேண்டும் என்பதை பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் நோடல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பறக்கும் படையினர், காவல்துறையினர் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளையும், கண்காணிப்பு பணிகளின்போது கைப்பற்றப்படும் பொருட்களையும் தேர்தல் நடத்தும் அலுவலரின் மூலம் மாவட்ட கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பாதுகாப்பான முறையில்
மேலும் வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பதை அறிந்திட வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பான முறையில் வைத்திட வேண்டும், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தேவையான கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், முக்கியமாக சமூக இடைவெளியையும் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story