சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தேர்தல் அமைதியாக நடைபெற பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி. அறிவுரை


சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தேர்தல் அமைதியாக நடைபெற பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி. அறிவுரை
x
தினத்தந்தி 28 Sept 2021 10:17 PM IST (Updated: 28 Sept 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி. அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்தும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 2 மாவட்டங்களிலும் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் பல்வேறு ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாதுகாப்பை பலப்படுத்த

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் எந்தவொரு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும், குறிப்பாக பதற்றம் நிறைந்த, மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க கூடுதலாக போலீசாரை பணியில் ஈடுபடுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். 

பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் உடனே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும். 

அதுபோல் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புக்கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது நடவடிக்கை

மேலும் அரசியல் கட்சியினர் சிலர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்துவதை தடுக்க 2 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து, மதுபாட்டில்கள் கடத்தல், சாராய விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 

அதுபோல் தொடர்ந்து ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை ஒடுக்கும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story