குழந்தை கண்முன்பு பெண்ணை வெட்டிக்கொன்ற ரவுடிக்கு ஆயுள் தண்டனை


குழந்தை கண்முன்பு பெண்ணை வெட்டிக்கொன்ற ரவுடிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 28 Sept 2021 10:58 PM IST (Updated: 28 Sept 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை கண்முன்பு பெண்ணை வெட்டிக்கொன்ற ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நாகப்பட்டினம்:
குழந்தை கண்முன்பு பெண்ணை வெட்டிக்கொன்ற ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ரவுடி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூரை சேர்ந்தவர் ஆனந்தவேலன்(வயது 39). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சரண்யா(36). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். சரண்யா அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். 
அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கணேஷ்குமார்(36). பிரபல ரவுடியான இவர் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு  வழக்குகள் உள்ளன. 
பாலியல் தொல்லை
சரண்யாவுக்கு, கணேஷ்குமார், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், தனது கணவர் ஆனந்தவேலனிடம் தெரிவித்துள்ளார். 
இதனை்த்தொடர்ந்து ஆனந்தவேலன், தனது நண்பர்களுடன் சென்று  கணேஷ்குமாரை தட்டிக்கேட்டு கண்டித்துள்ளார். மேலும் இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசிலும் புகார் கொடுத்தார். 
வெட்டிக்கொலை
தன் மீது போலீசில் புகார் கொடுத்ததால் ஆனந்தவேலன் மற்றும் சரண்யா மீது கணேஷ்குமார் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி ஆனந்தவேலனின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது சரக்கு ஆட்டோவை கணேஷ்குமார் அடித்து உடைத்தார். சத்தம் கேட்டு குழந்தையுடன் சரண்யா வெளியே வந்தார். அப்போது அவரை பார்த்தும் ஆத்திரம் அடைந்த கணேஷ்குமார், தான் வைத்திருந்த அரிவாளால் சரண்யாவை அவரது குழந்தையின் கண் முன்னே சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்த அவர் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அவர் தனது தீர்ப்பில் சரண்யாவை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து  கணேஷ்குமார் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Next Story