வேதாரண்யத்தில், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து வேதாரண்யத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து வேதாரண்யத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
4-வது நாளாக வேலை நிறுத்தம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து கடந்த 24-ந் தேதி மீன்பிடிக்க சென்ற சிவக்குமார், சிவா, சின்னத்தம்பி ஆகிய 3 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் அவர்கள் காயம் அடைந்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மாதத்தி்ல் மட்டும் 4 முறை ஆறுகாட்டுத்துறை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி வலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த தொடர் தாக்குதலை கண்டித்து வேதாரண்யம் பகுதி மீனவர்கள் நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாகை மாவட்டத்தில் உள்ள 24 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலை கண்டித்தும், தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என மீனவர்கள், கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தூதரகம் முற்றுகை
மத்திய, மாநில அரசுகள் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் நாகை, காரைக்கால், மாயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என மீனவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story