இழப்பீடு வழங்காததால் தனியாருக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் தனியாருக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் ஜப்தி
x
தினத்தந்தி 28 Sept 2021 11:56 PM IST (Updated: 28 Sept 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் ஜப்தி செய்யப்பட்டது.

குளித்தலை,
விபத்தில் 7 பேர் பலி
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் ராஜு மகன் நாராயணமூர்த்தி மற்றும் மாதையன் மகன் நாகராஜ். இவர்கள் 2 பேரும் கடந்த 2009-ம் ஆண்டு முசிறியில் இருந்து குளித்தலை வருவதற்காக, அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பால் வேனில் ஏறியுள்ளனர். 
இவர்களை போல் 10-க்கும் மேற்பட்டோர் இந்த வேனில் ஏறி வந்துள்ளனர். இந்த வேன் முசிறி அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையோர மரத்தில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நாராயணமூர்த்தி, நாகராஜ் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இழப்பீடு தொகை
இந்தநிலையில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கோரி நாராயணமூர்த்தி மற்றும் நாகராஜ் குடும்பத்தினர் தனித்தனியாக குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி அய்யப்பன்பிள்ளை, நாராயணமூர்த்தியின் குடும்பத்தாருக்கு ரூ.7 லட்சத்து 74 ஆயிரமும், நாகராஜ் குடும்பத்தினருக்கு 5.29 லட்சமும் இழப்பீடாக தனியார் நிறுவன உரிமையாளரான ஆனந்த் வழங்கவேண்டுமென கடந்த 2014-ல் உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு தொகையை அவர் தரவில்லை. 
17 ஏக்கர் நிலம் ஜப்தி
இதையடுத்து நாராயணமூர்த்தி மற்றும் நாகராஜ் குடும்பத்தினர் கடந்த 2018-ல் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முக கனி, வட்டியுடன் சேர்த்து நாராயணமூர்த்தி குடும்பத்தாருக்கு ரூ.13 லட்சத்து 23 ஆயிரத்து 176, நாகராஜ் குடும்பத்திற்கு ரூ.9 லட்சத்து 7 ஆயிரத்து 397 வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லையெனில் அந்த தனியார் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான நிலம் ஜப்தி செய்யப்படும் என கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி தீர்ப்பு கூறினார்.
இதன் பின்னரும் அந்த தனியார் நிறுவனத்தார் இழப்பீடு தொகை வழங்காததால். நீதிபதியின் உத்தரவுபடி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பாலராஜபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் நீதிமன்ற ஊழியர்களால் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.

Next Story