கோமுகி அணையின் நீர்மட்டம் 34.50 அடியாக உயர்வு


கோமுகி அணையின் நீர்மட்டம் 34.50 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 29 Sept 2021 12:15 AM IST (Updated: 29 Sept 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 34.50 அடியாக உயர்ந்துள்ளது.

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் நீர்மட்டம் 46 அடி என்றாலும் பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் திறக்கப்படும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் அணையின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்ததும் மீன் வளர்ப்புக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கல்படை பொட்டியம் ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு 400 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் 25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 9.50 அடி உயர்ந்து தற்போது 34.50 அடியாக உயர்ந்து கடல் போன்று காட்சி அளிக்கிறது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

Next Story