புதிதாக கட்டப்பட்ட கடையன்குளம் கால்வாயில் திடீர் விரிசல்; உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்


புதிதாக கட்டப்பட்ட கடையன்குளம் கால்வாயில் திடீர் விரிசல்; உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Sept 2021 12:27 AM IST (Updated: 29 Sept 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

இட்டமொழி அருகே புதிதாக கட்டப்பட்ட கடையன்குளம் கால்வாயில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இட்டமொழி:
இட்டமொழி அருகே புதிதாக கட்டப்பட்ட கடையன்குளம் கால்வாயில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கால்வாயில் விரிசல்

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா, இட்டமொழி அருகே உள்ள விஜயஅச்சம்பாடு பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த கிராமத்தில் இருக்கும் குளத்திற்கு கடையன்குளத்தில் இருந்து தண்ணீர் வருவதற்காக கடையன்குளம் கால்வாய் புதிதாக கட்டப்பட்டது.
ஆனால், கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் தற்போது அந்த கால்வாயில் திடீர் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
தண்ணீர் வீணாகும்
எங்கள் பகுதி குளத்துக்கு தண்ணீர் வருவதற்கு வசதியாக கடையன்குளம் கால்வாய் புதிதாக கட்டப்பட்டது. இது எங்களுக்கு பயன்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், அதில் விரிசலும், வெடிப்புகளும் ஏற்பட்டு இருப்பது எங்களுக்கு வேதனையை அளிக்கிறது. 
இப்போதே இப்படி இருக்கும் நிலையில் தண்ணீர் வரும் காலங்களில் இந்த கால்வாய் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மதகு நீர் வரும் காலங்களில் இந்த கால்வாய் மண்ணோடு மண்ணாக அடித்துச் செல்லப்பட்டால், நீர் முழுவதும் இப்பகுதி விவசாய மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் வெள்ளநீர் கால்வாய்க்கு சென்று வீணாகிவிடும்.

ஆய்வு செய்ய வேண்டும்

இதனால் நாங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் புதிதாக கட்டப்பட்ட கடையன்குளம் கால்வாயின் தரத்தை உரிய பொறியியல் வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து, தரமான முறையில் புதிய கால்வாய் கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story