மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்
மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
நெல்லை:
மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆட்டுச்சந்தை
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டிருந்தாலும் காய்கறி சந்தைகள், ஆடு, கோழி, மாடு விற்பனை செய்யக்கூடிய சந்தைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை. கடந்த மாதம் முதல் சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து வியாபாரிகள் ஏராளமான ஆடுகளை லோடு ஆட்டோ, லோடு வேன்களில் கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
மேலும் ஐப்பசி மாதம் அம்மன் கோவில் கொடை விழா என்பதனால் கோவில்களில் பலியிடக்கூடிய செம்மறியாடு, வெள்ளாடு, உள்ளிட்ட ரக ஆடுகளை போட்டி போட்டு பொதுமக்கள் வாங்கி சென்றனர். நேற்று மேலப்பாளையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. மேலும் பல்வேறு வகையான ஆடுகளும் விற்பனைக்கு வந்தது. அந்த ஆடுகளை ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
அபராதம்
இந்த நிலையில் நேற்று மேலப்பாளையம் சந்தையில் ஆயிரக்கணக்கானவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் உள்ளதாகவும் மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு முககவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம் விதித்து, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.
மேலும் சந்தைக்கு செல்லும் நுழைவு வாசலில் போலீசார் நிறுத்தப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் பொது மக்களை பிரித்து அனுப்பினர். இதேபோல் சந்தையை விட்டு வெளியேறும் வாசலிலும் சமூக இடைவெளியை விட்டு செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து சந்தையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதிய கட்டணம்
இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சந்தைக்கு வரும் கால்நடைகளான ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளுக்கு விலை உயர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று சந்தைக்கு வந்த நபர்களிடம் மாற்றப்பட்ட புதிய கட்டண விவரம் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் புதிய கட்டண விவரம் பிளக்ஸ் போர்டில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story