கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன், ரங்கசாமி திடீர் சந்திப்பு
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை, முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
புதுச்சேரி, செப்.29-
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை, முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
அரசியல் கட்சிகளுக்கு சவால்
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங் களாக நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 21-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டாலும், பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு தற்போது தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.
கொரோனா பேரிடர் மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிந்து 6 மாதங்களுக்குள் அடுத்த தேர்தலை சந்திப்பது பொருளாதார ரீதியில் அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு
வார்டு மறுவரையறை மற்றும் ஒதுக்கீடு விஷயத்தில் தவறுகள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டும் அரசியல் கட்சிகள், அதையே காரணமாக காட்டி யாராவது கோர்ட்டை அணுகி தேர்தலுக்கு தடை பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றன.
அரசியல் கட்சிகள் சார்பில் நேரடியாக தடை கேட்டு கோர்ட்டுக்கு சென்றால் தங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்று கருதி நேரடியாக வழக்கு தொடர தயங்கி வருகின்றன.
இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் 4 மாத அவகாசம் பெற்றுள்ளது. அதேபோல் புதுவை அரசும் சுப்ரீம் கோர்ட்டில் காலஅவகாசம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கவர்னருடன் சந்திப்பு
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜனை நேற்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சிறிது நேரம் மட்டும் நடந்தது. அவர்கள் இருவரும் அரசு நிர்வாகம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகையை விட்டு வெளியே வந்தார். பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்த அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
____
Related Tags :
Next Story