தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு?
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது.
புதுச்சேரி, செப்.29-
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது.
நேரடி வகுப்புகள்
புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்ததால் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்தநிலையில் தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்த திட்டமிட்டு தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. புதுவையிலும் இதுதொடர்பாக ஏற்கனவே திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
தயார் நிலை
அதாவது பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வகுப்புகளை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு பள்ளிகளை திறப்பதில் பிரச்சினை இல்லை. பள்ளி குழந்தைகள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து புதுவையிலும் பள்ளிகளை திறக்க கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி மதிய உணவு வழங்குவது உள்ளிட்ட சேவைகளை வழங்கவும் தயார் நிலையில் இருப்பதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளதன்படி புதுச்சேரியிலும் அன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story