நிழற்குடை-மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த லாரி


நிழற்குடை-மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த லாரி
x
தினத்தந்தி 29 Sept 2021 1:40 AM IST (Updated: 29 Sept 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

நிழற்குடை-மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த லாரி

கொள்ளிடம் டோல்கேட், செப்.29-
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பலமனேரி பகுதியில் உள்ள பழைய பாட்டில் நிறுவனத்தில் இருந்து 10 டன் எடைகொண்ட காலி மதுபாட்டில்கள் ஏற்றப்பட்ட லாரி ஒன்று சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் பகுதியில் உள்ள மற்றொரு பாட்டில் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த சைவராஜின் மகன் சுந்தரமூர்த்தி(வயது 29) ஓட்டினார். அப்போது அவர் மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து நம்பர் 1 டோல்கேட் செல்லும் சாலையில் லாரியை தாறுமாறாக ஓடியதால், லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலிபாட்டில் மூட்டைகள் வழியெங்கும் விழுந்து உடைந்தன சிதறின. மேலும் தாளக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகே உள்ள பஸ் நிறுத்த நிழற்குடை மற்றும் மின்சார கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் அருகில் நின்ற கார் மீது விழுந்ததில் அந்த கார் மீது சேதம் அடைந்தது. மேலும் நிழற்குடை அருகே அமர்ந்திருந்த ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் விபத்தில் சிக்கிய லாரி டிரைவரும் படுகாயமடைந்தார். இந்த விபத்தினால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story