மாடுகள் திருடிய சிறுவன் உள்பட 6 பேர் கைது


மாடுகள் திருடிய சிறுவன் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2021 8:14 PM GMT (Updated: 28 Sep 2021 8:14 PM GMT)

மாடுகள் திருடிய சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை செங்கமேடு மணக்கொல்லை பகுதியில் வசிப்பவர் அருளானந்தம்(வயது 60). இவர் விளந்தை வடக்கு புளியங்குளம் ஏரிக்கு அருகில் நிலம் வாங்கி விவசாயம் செய்து கொண்டு, அங்கேயே கொட்டகை அமைத்து கால்நடைகள் வளர்த்து பராமரித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு மாடுகளை வயலில் உள்ள கொட்டகையில் கட்டிவிட்டு, வரதராஜன்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தங்கினார். மறுநாள் காலை மீண்டும் வயலுக்கு வந்து பார்த்தபோது ஒரு ஜோடி மணப்பாறை மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீசில் அருளானந்தம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது, சில மர்ம நபர்கள் மாடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அதைக்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள கண்டியங்குப்பம் அந்தோணிசாமி மகன் பிரான்சிஸ் சேவியர் (28), காட்டுமன்னார்குடி அருகே உள்ள அறந்தாங்கி ஜோசப் மகன் ராஜா (24), ஸ்ரீமுஷ்ணம் புதுக்குப்பம் ஜோயிஷ்குமார் (21), ஆதிவராகநல்லூர் சபரிவாசன் (20), ஸ்ரீமுஷ்ணம் பழனியாண்டவர்கோவில் தெரு முத்துவேல் (22) மற்றும் ஒரு 16 வயது சிறுவன் ஆகியோர் மாடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான ஆண்டிமடம் போலீசார் விரைந்து செயல்பட்டு, அவர்களை கைது செய்து மாடுகளை மீட்டனர். மேலும் கடந்த மாதத்தில் ஆண்டிமடம் பகுதியில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story