தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்- கனிமொழி எம்.பி. பங்கேற்பு
தென்காசியில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
தென்காசி:
அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்று தென்காசியில் கனிமொழி எம்.பி. கூறினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மதியம் நடந்தது.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வரவேற்று பேசினார்.
கனிமொழி எம்.பி.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறந்த ஆட்சியாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பல பத்திரிகைகள் பாராட்டும் அளவிற்கு இந்த ஆட்சி நடைபெறுகிறது. பல மாநிலங்களில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி போல நமக்கும் கிடைக்காதா? என ஏங்குகிறார்கள். கடந்த 10 ஆண்டு காலத்தில் தமிழகம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யவில்லை. புதிதாக தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு யாரும் வரவில்லை.
40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளார். மேலும் அவர் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலைகள் அமைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். இதன்மூலம் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக ேவண்டும் என்ற திட்டத்தை நனவாக்கி உள்ளார். விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் இந்த ஆட்சியில்தான் போடப்பட்டது. பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் என அறிவித்தார். கொரோனா காலத்தில் அவர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூ.4 ஆயிரம் வழங்கினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆட்சியில் 4 வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று கூறுகிறார். ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அனைத்து திட்டங்களையும் கூறுகிறார்கள். அவரும் சட்டமன்றத்தில் தான் இருக்கிறார். அப்படியிருக்க அவர் ஏன் அவ்வாறு கூறுகிறார்? என்று தெரியவில்லை.
100 சதவீதம் வெற்றி
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 100 சதவீதம் வெற்றி பெற்றால் தான் மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடையும். எனவே தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
கூட்டத்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனிதுரை, தென்காசி நகர செயலாளர் சாதிர், தொழில்அதிபரும், ஓணம் பீடி உரிமையாளருமான பாலகிருஷ்ணன், தென்காசி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம் இப்ராகிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். கூட்டத்தில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேஷ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story