போலீஸ் வாகனத்தின் மீது கல்வீசி தாக்கி விட்டு சாப்பாட்டுக்காக சிறைக்கு சென்ற வாலிபர் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
திருவனந்தபுரத்தில் சாப்பாட்டுக்காக போலீஸ் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி விட்டு வாலிபர் ஒருவர் சிறைக்கு சென்ற வினோத சம்பவம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம்,
சாப்பாடு ஒன்றும் சும்மா கிடைத்து விடாது. அதற்கு பணம் வேண்டும். பணம் கொடுத்தால் தான் உணவு கிடைக்கும். அதற்கு ஒவ்வொருவரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஒரு சாண் வயிற்றுக்காக மனிதர்கள் படும் பாடு மிகவும் அதிகம் என்றே கூறவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேரள மாநிலத்தில் ஒரு வாலிபர் சாப்பாட்டுக்காக நான் சிறைக்கு செல்லப்ேபாகிறேன் என்று கூறிய வாக்கு மூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் அய்லம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது 29). இவருக்கு வேலை கிடைக்க வில்லை. அதனால் பணமும் கையில் இல்லை. இதனால் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அவர் கஷ்டப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றிங்கல் காவல் நிலையம் முன்பு நின்ற போலீஸ் ஜீப் மீது கல் வீசிதாக்கினார். உடனடியாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 மாதம் எந்த கஷ்டமும் இல்லாமல் 3 வேளையும் சிறையில் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் பிஜூ கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்தாகிவிட்டது. மீண்டும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று நினைத்த பிஜூ மீண்டும் பல இடங்களில் வேலை தேடினார். ஆனால் அவருக்கு யாரும் வேலை வழங்க முன்வரவில்லை.
இதனால் பிஜூ ஒரு வேளை சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஆற்றிங்கல் போலீஸ் நிலையம் முன்பு நின்ற ஜீப் மீது கல் வீசி தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், "வேலை தேடி பல்வேறு இடங்களுக்கும் அலைந்து விட்டேன். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வருகிறேன். மற்றவர்களிடம் கடன் கேட்க என் மனம் மறுக்கிறது. சிறைக்கு சென்றால் உணவாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கல்வீசினேன்" என்று கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வேறு வழியின்றி அவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தனி மனிதனுக்கு உணவு இல்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்று மகாகவி பாரதி பாடினார். வாலிபரின் இந்த நிலைக்கு யார் காரணம்?. இந்த சமூகம் தான் விழித்துக்கொள்ள வேண்டும்.
Related Tags :
Next Story