டெம்போ மோதி தொழிலாளி பலி


டெம்போ மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 29 Sept 2021 2:39 AM IST (Updated: 29 Sept 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே குடும்பத்தினர் கண் முன் டெம்போ மோதி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே குடும்பத்தினர் கண் முன் டெம்போ மோதி தொழிலாளி பரிதாபமாக பலியானார். 
 இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
இரணியல் அருகே உள்ள மேக்காமண்டபம், மாரான்கோணம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 60), தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று காலை தூத்துக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் வேனில் சென்றார்.
 நிகழ்ச்சி முடிந்த பின்பு மீண்டும் அவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆரல்வாய்மொழி அருகே உள்ள விசுவாசபுரம் பகுதியில் ஒரு கடையில் டீ குடிப்பதற்காக வேனை சாலையோரமாக நிறுத்தினர். கிறிஸ்துதாஸ் வேனில் இருந்து இறங்கி இயற்கை உபாதை கழிக்க சாலையை கடக்க முயன்றார். 
டெம்போ மோதியது
அப்போது, நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி வந்த டெம்போ கிறிஸ்துதாஸ் மீது மோதியது. இதில் கிறிஸ்துதாஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு வேனில் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கிறிஸ்துதாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் டெம்போவை ஓட்டி வந்த தேவசகாயம்மவுண்டை சேர்ந்த சகாய ஜோன்ஸ் (27) என்பவர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த கிறிஸ்து தாசுக்கு அலெக்ஸ் மேரி என்ற மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story