5 வீடுகள் இடிந்து விழுந்தன


5 வீடுகள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 29 Sept 2021 2:45 AM IST (Updated: 29 Sept 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்தது. இதன் காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்தன. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3½ அடி உயர்ந்தது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்தது. இதன் காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்தன. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3½ அடி உயர்ந்தது.
குமரியில் மழை
வங்கக்கடலில் உருவான புயலால் குமரி மாவட்டத்தில் கடந்த 26-ந் தேதி மாலையில் பெய்யத் தொடங்கிய மழை மறுநாள் அதிகாலை வரை தொடர்ந்தது. இந்த மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் பழையாறு, பரளியாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 அதனைத்ெதாடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை வரை பெய்த மழை பகலில் ஓய்ந்தது. பின்னர் லேசான வெயிலும் இருந்தது. இதனால் மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியது. ஆறுகள், வாய்க்கால்களிலும் பாய்ந்தோடிய மழைநீரும் குறையத் தொடங்கியது.
அருவியில் வெள்ளம்
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து காலை 9.30 மணி வரை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ- மாணவிகளும் குடை பிடித்த படியும், மழையில் நனைந்த படியும் சென்றனர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு வேலைகளுக்காக செல்லக்கூடிய தொழிலாளர்களும் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் சென்றதையும் காண முடிந்தது.
மேலும் தோவாளை வாய்க்கால், அனந்தனார் வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் மழை வெள்ளம் 2-வது நாளாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நாகர்கோவில் பறக்கிங்கால் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள்   தவித்து வருகிறார்கள்.
37.2 மி.மீ. பதிவு
இதனால் நேற்று பெய்த மழையின் காரணமாக ஆறுகள், வாய்க்கால்களில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 11.2, பெருஞ்சாணி அணை- 36, புத்தன் அணை- 37.2, சிற்றார்-1 அணை - 16, சிற்றார்- 2 அணை- 27, மாம்பழத்துறையாறு அணை- 1, முக்கடல் அணை- 2.4, பூதப்பாண்டி- 1.6, களியல்- 3.2, கன்னிமார்- 2.8, குழித்துறை- 4.4, கோழிப்போர்விளை- 2, முள்ளங்கினாவிளை- 5, ஆனைக்கிடங்கு- 1.2 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.
3½ அடி உயர்வு
இதற்கிடையே நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.08 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2346 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 529 கனஅடி தண்ணீர் பாசன மதகுகள் வழியாகவும், 549 கன அடி தண்ணீர் உபரிநீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 59.65 அடியாக இருந்தது. ஆனால் நேற்று ஒரேநாளில் 3½ அடி உயர்ந்து, 63 அடியானது. அணைக்கு வினாடிக்கு 2869 கன அடி தண்ணீர் வந்தது. 
சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 88 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 135 கன அடி தண்ணீரும் வந்தது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 18 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 7 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 7.42 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
5 வீடுகள் இடிந்து விழுந்தன
இந்த மழையால் விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 3 வீடுகளும் என மொத்தம் 5 வீடுகள் இடிந்து விழுந்ததாக வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் குமரி மாவட்டத்தின் பிரதான தொழில்களான விவசாயத் தொழில், மீன்பிடி தொழில், உப்பளத் தொழில், செங்கல்சூளைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளும், தொழிலாளர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

Next Story