தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கருணாகரன் மீது தாக்குதல்?


தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கருணாகரன் மீது தாக்குதல்?
x
தினத்தந்தி 29 Sept 2021 2:47 AM IST (Updated: 29 Sept 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கருணாகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி கோலார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் தங்கவயல்: கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கருணாகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி கோலார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் போலீஸ் மாவட்ட சூப்பிரண்டாக இருந்து வருபவர் இலக்கியா கருணாகரன். இவர் சம்பவத்தன்று தங்கவயலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு இல்லத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அஜ்ஜம்பள்ளி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி கோலார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுபற்றி நேற்று போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கருணாகரன் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 பேர் கைது

சம்பவம் நடந்ததாக கூறப்படும் அஜ்ஜம்பள்ளி சாலையில் நான் தினமும் மாலை வேளையில் நடைபயிற்சியில் ஈடுபடுவேன். இந்த சந்தர்ப்பத்தில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் பரவுகின்றன. அது வதந்தி. அதை யாரும் நம்ப வேண்டாம். சம்பவம் நடந்த அன்று என்னுடைய மெய்க்காவலரான போலீஸ்காரர் முனிரத்னம் பங்காருபேட்டையில் இருந்து தங்கவயல் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அஜ்ஜம்பள்ளி வழியாக வந்துள்ளார். அப்போது அவரை 5 பேர் கும்பல் தாக்கி அவரிடம் இருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். 

அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி போலீஸ்காரர் முனிரத்னம் அளித்த புகாரின்பேரிலும், அவர் கொடுத்த மர்ம நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண் அடிப்படையிலும் 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story