இறந்தவர் பெயரில் கொரோனா நிவாரண நிதி மோசடி


இறந்தவர் பெயரில் கொரோனா நிவாரண நிதி மோசடி
x
தினத்தந்தி 29 Sept 2021 2:57 AM IST (Updated: 29 Sept 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே இறந்தவர் பெயரில் கொரோனா நிவாரண நிதியை மோசடி செய்த ரேஷன் கடை ஊழியர் சிக்கினார்.

திருவட்டார்:
திருவட்டார் அருகே இறந்தவர் பெயரில் கொரோனா நிவாரண நிதியை மோசடி செய்த ரேஷன் கடை ஊழியர் சிக்கினார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கொத்தனாரின் தாயார்
திருவட்டார் அருகே உள்ள குட்டைக்காடு, வெட்டுக்காட்டுவிளையை சேர்ந்தவர் ராஜகுமார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் செல்லப்பூ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி இறந்தார். செல்லப்பூவின் ரேஷன் கார்டில் அவரது பெயர் மட்டுமே இருந்தது. அந்த கார்டில் செல்லப்பூவின் மகள் சசிகலாவின் செல்போன் நம்பர்  கொடுக்கப்பட்டிருந்தது. 
இந்தநிலையில், செல்லப்பூ இறந்த மறுமாதத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் ரேஷன் பொருட்கள் வாங்க செல்லவில்லை. ஆனால், சசிகலாவின் செல்போன் எண்ணுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து சசிகலா ரேஷன் கடை ஊழியரிடம் கேட்ட போது அவர் ‘தவறுதலாக வந்தது’ என்று சொல்லி சமாளித்துள்ளார். மேலும், தமிழக அரசு வழங்கிய கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 இரண்டு மாதங்களாக பெறப்பட்டதாகவும் குறுந்தகவல் வந்துள்ளது.  இதுகுறித்து சசிகலா சென்று கேட்ட போதெல்லாம் கடை ஊழியர் திறமையாக சமாளித்து வந்தார். 
அதிகாரி விசாரணை
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜகுமார் வீட்டுக்கு திருவட்டார் வட்ட வழங்கல் அதிகாரி குமார் சென்று, ‘இறந்தவர் பெயரில் நீங்கள் கொரோனா நிவாரண நிதி எப்படி பெற்றீர்கள்?’ என கேட்டார். அப்போது, தான் அவ்வாறு பணம், பொருட்கள் வாங்கவில்லை என்றும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் ராஜகுமார் கூறினார்.
இதையடுத்து வட்ட வழங்கல் அதிகாரி விசாரணையை முடுக்கி விட்டார். அப்போதுதான் செறுகோல் ரேஷன் கடை ஊழியர் கைரேகை இல்லாமல் பொருட்கள் வினியோகிக்கும் முறையை பயன்படுத்தி இறந்த செல்லப்பூ பெயரில் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஊழியருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடைேய இந்த சம்பவம் தொடர்பாக ராஜகுமார், வட்ட வழங்கல் அதிகாரியிடம் புகார் கொடுத்தார். அதில் இறந்த தனது தாயார் பெயரில் ரேஷன் பொருட்கள், கொரோனா பணம் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். 
அபராதம் விதிக்கப்படும்  
இதுகுறித்து திருவட்டார் வட்ட வழங்கல் அலுவலர் குமார் கூறும் போது, ‘செறுகோல் ரேஷன்கடையில் ஏற்கனவே இறந்தவர் பெயரில்  கொரோனா நிவாரண நிதி எடுத்ததற்கு அபராதம் விதித்துள்ளோம். அத்துடன் அந்த ரேஷன் கார்டும் முடக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். வீட்டில் ஒருவர் இறந்தால் உடனே அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். ஒரு நபர் கார்டு என்றால் சம்பந்தப்பட்ட கார்டை வட்ட வழங்கல் அலுவலகம் சென்று ஒப்படைக்க வேண்டும்’ என்றார்.

Next Story