இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பேரம் பேசும் அவலம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சென்னையில் உள்ள மாநகராட்சி மயானபூமிகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். இது குறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இடைத்தரகர்கள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 41 மின் எரியூட்டும் மயானபூமியும், 199 கல்லறை தோட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மின் மயானபூமியில் தகனம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் எந்த ஒரு கட்டணங்களும் பெறப்படுவதில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு உடல்களை தகனம் செய்ய பெரிய அளவில் பணம் லஞ்சமாக பெறப்படுவதாக கூறப்படுகிறது.
இறுதிச் சடங்கு மேற்கொள்வதற்கும், மயானபூமியில் பதிவு செய்யவதற்கும் மயான பூமி இயங்கும் வளாகத்திலேயே இடைத்தரகர்கள் கழுகுபோன்று சுற்றுகின்றனர். இந்த இடைத்தரகர்கள் இறுதி சடங்குகளுக்கு பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், அங்கு நடைபெறும் ஒவ்வொரு பணிகளுக்கு தனித்தனியாக ஒரு விலை உள்ளதாகவும், இறுதிச் சடங்கை விரைவாக முடிக்க தங்களால் தான் முடியும் என கூறி பேரம் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை
மயான பூமி வளாகங்களிலேயே இந்த இடைத்தரகர்கள் மது குடித்துக் கொண்டும், அங்குள்ள அறைகளில் தூக்குவதுமாகவே இருந்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் இலவசமாக வழங்கப்படும் சேவைகளான இறுதி ஊர்வல வாகனம், மயானபூமியில் தகனம் ஆகியவைக்கும் பணம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது. இங்கு இறுதி ஊர்வல வாகனம் முதல், இறப்பு சான்றிதழை உடனடியாக பெற்று தருவது வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பணம் பெறுவதாக பல்வேறு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இவர்களை கடந்து உள்ளே இருக்கும் மாநகராட்சி ஊழியர்களிடம் பதிவு செய்ய சென்றால், அவர்களும் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இடைத்தரகர்களை மீறி உள்ளே மாநகராட்சி ஊழியர்களிடம் செல்லும் பொதுமக்களை, இடைத்தரகர்கள் மிரட்டுவதும், அங்கு பணியில் உள்ள மாநகராட்சி ஊழியர் உடல் தகனத்துக்கு ரூ.1,500-ம், பின்னர் அந்த சாம்பலை தருவதற்கு ரூ.1,500 என மொத்தம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்பதாகவும், இறுதி ஊர்வல வாகனத்துக்கு ரூ.2,500 கொடுக்க சொல்வதாகவும் கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வரும் நிலையில் இடைத்தரகர்கள் பேரம் பேசுவதும், மாநகராட்சி ஊழியர்கள் லஞ்சம் கேட்பதும் மிகவும் மனவேதனையை ஏற்படுத்துகிறது என இறுதிச் சடங்கு செய்ய வரும் உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிறப்பு குழுக்கள்
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால், அந்த புகாரின் அடிப்படையில் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மேலும் மீண்டும் இந்த லஞ்ச வழக்கம் தொடர்வதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் மணிஷ் நரவனே கூறியதாவது:-
மயானபூமி தொடர்பாக இதுவரை 54 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த புகார்களை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் லஞ்ச புகார் குறித்த பிரச்சினை தொடர்பாக சிறப்பு குழுக்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story