மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு மறைக்க நினைக்கிறது பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை புகார்


மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு மறைக்க நினைக்கிறது  பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை புகார்
x
தினத்தந்தி 29 Sept 2021 7:14 PM IST (Updated: 29 Sept 2021 7:14 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு மறைக்க நினைக்கிறது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்தார்

தூத்துக்குடி:
மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு மறைக்க நினைக்கிறது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
நீட் தேர்வு
தமிழகத்தில் கொலைக் குற்றங்களை தடுப்பதற்காக போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  நீட் யாருக்கும் எதிரான தேர்வு கிடையாது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர். நீட் தேர்வுக்கு எந்த காரணத்துக்காக விலக்கு கேட்கிறார்கள?். சமூக நீதிக்கு எதிரானது என்று கூறுகிறார்கள். நீட் தேர்வு சமூகநீதியை நிலைநாட்டக்கூடியது என்பதை புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம். ஆகையால் அரசியல் காரணத்துக்காக நீட் பற்றி பேசுகிறார்கள். பிளஸ்-2 தேர்வு காரணமாகவும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள்       உயிரிழந்து       உள்ளனர். மாணவர்களின் நலனுக்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களின் உயிரிழப்பை தடுப்பதற்கு மாணவர்களை குழப்பாமல், தி.மு.க அமைதியாக இருந்தாலே போதும். மாணவர்கள், பெற்றோர் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டனர். தனியார் மருத்துவ கல்லூரி நடத்துபவர்கள்தான் ஏற்றுக் கொள்ளவில்லை.
தேர்தல் பிரசாரம்
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க ஆட்சி அமைந்ததும் வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளுக்கு கடன் ‌தள்ளுபடி கிடைக்கும். எனவே நகை அடமானம் வைக்காதவர்கள் இப்போதே வங்கியில் நகை கடன் பெற்றுக்கொள்ளுங்கள், தி.மு.க ஆட்சி அமைந்ததும் கடன் தள்ளுபடி பெறலாம் என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். ஆனால் தற்போது முதல்-அமைச்சர் மு.க‌.ஸ்டாலின், சட்டசபையில் பேசும்போது, வங்கிகளில் முறைகேடாக நகை அடமானம் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கிறார். நியாயப்படி பார்த்தால், முதலில் உதயநிதி ஸ்டாலின் மீது தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதெல்லாம் தி.மு.க. அரசியலுக்காக போடுகிற நாடகம்.
அனுமதி
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கக்கூடிய அரசு, ஏன் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெரியவர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறது?. டாஸ்மாக்கிற்கு விதிமுறை போடாத அரசு, கோவில்களுக்கு ஏன் போடுகிறது?.
எனவே, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த அரசு, எல்லா மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும். அனைத்து நிலையிலும் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
வெற்றி கிடைக்கும்
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் பங்கீடு என்பது எப்போதும் இழுபறியாக இருக்கும். நம் கூட்டணியில் எளிதாக பங்கீடு முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
கரீப் கல்யாண் யோஜனா, கொரோனா தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க நினைக்கிறது தமிழக அரசு.
மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களிலும் மாநில அரசு, பிரதமர் படத்தை கூட வெளியிடாமல் எல்லாம் மாநில அரசு செய்வதாக சொல்லிக்கொள்வது எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்?.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story