தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு:
குடிநீா் வினியோகம் செய்யப்பட்டது
பாளையங்கோட்டை தியாகராஜநகர் பி.ஏ.பிள்ளைநகரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் தங்கள் பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும், சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினத்தந்தி புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று முன்தினம் செய்தியாக வெளியானது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததின் பேரில் நேற்று அந்த பகுதியில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
மின்மாற்றியை சூழ்ந்த குடிநீர்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் வழியில் மகாராஜநகர் எதிர்புறம் மின்மாற்றி உள்ளது. இதன் அருகில் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய குடிநீர் குழாயில் கடந்த ஒரு வாரமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த தண்ணீரானது மின்மாற்றியை சுற்றி தேங்கி கிடப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
அசரியா, மகாராஜநகர்.
நாய்கள் தொல்லை
நெல்லை பேட்டை ரகுமான்பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் தெருவில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் ெதருவில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
நாசிர், பேட்டை.
ஊர் பெயர் பலகை சரிசெய்யப்படுமா?
நெல்லை பேட்டை 49-வது வார்டு பேட்டை-பழையபேட்டை இணைப்பு சாலையில் திருப்பணிகரிசல்குளம் செல்லும் வழி என்று பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெயர் பலகை கடந்த 6 மாதங்களாக கீழே விழுந்து கிடக்கிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த பெயர் பலகை மீண்டும் சரிசெய்து அதே இடத்தில் வைக்க வேண்டுகிறேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அமீர், பேட்டை.
கொசு தொல்லை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கிருஷ்ணாபுரம் 33-வது வார்டு மேற்குமலம்பாட்டு ரோடு எம்.எச். தெருவில் சாக்கடைகள் அள்ளி பல மாதங்கள் ஆகின்றன. இதனால் தெருவில் சுகாதார கேடு ஏற்படுவதுடன் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே, சாக்கடையை தூய்மை செய்து கொசு தொல்லையை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இசக்கியம்மாள், கிருஷ்ணாபுரம்.
வாரச்சந்தையில் அடிப்படை வசதி வேண்டும்
செங்கோட்டை மேலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே நகராட்சி வாரச்சந்தை செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும். இங்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி பக்கத்து ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால், இந்த வாரச்சந்தை எந்தவிதமான அடிப்படை வசதியுமின்றி, மழை காலத்தில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
மேலும், போதிய இடவசதி இருந்தும், பராமரிப்பு இல்லாததால் வியாபாரிகளில் ஒரு பகுதியினர் காய்கறிகளை ஆஸ்பத்திரி எதிரே உள்ள குண்டாறு அணை செல்லும் சாலையில் வைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சந்தையில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
பயணிகள் நிழற்கூடம் அமையுமா?
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் கிராம மக்கள் பஸ்சுக்காக வெயிலில் வெகுநேரம் காத்திருக்கும் அவலம் உள்ளது. தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால், கிராம மக்களின் வசதிக்காக அந்தோணியார்புரத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
உடையார், புதுக்கோட்டை.
சாலை வசதி
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 5-வது வார்டு 4-வது தெருவில் பல ஆண்டுகளாக சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். இங்கு சாலை வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுதாகர் சுப்பையா, முத்தம்மாள் காலனி.
நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
திருச்செந்தூர் சன்னதிதெரு வள்ளலார் கோவில் முன்புள்ள நடைமேடையில் மணல் மற்றும் ஜல்லி கற்கள் பல மாதங்களாக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் நடைமேடையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல், ஜல்லிகற்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
மோகனசுந்தரம், திருச்செந்தூர்.
Related Tags :
Next Story