புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு ரூ.4 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல் 2 பேர் கைது


புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு ரூ.4 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 9:49 PM IST (Updated: 29 Sept 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு ரூ.4 லட்சம் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம், 

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டுகள் பாலு, ராஜபாண்டி, சசிக்குமார், போலீஸ்காரர் வசந்தகுமார் ஆகியோர் கண்டமங்கலத்தை அடுத்த பள்ளித்தென்னல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் போலீசார் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த சரக்கு வாகனத்தினுள் 150 அட்டைப்பெட்டிகளில் 7,200 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும், புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் (வயது 24), புதுச்சேரி கலிதீர்த்தான்குப்பத்தை சேர்ந்த குணசேகரன் மகன் ராஜ்குமார் (24) என்பதும், 

இவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டிப்பாளையத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்ததும், உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் அரசு மதுக்கடைகளை மூடும்பட்சத்தில் அந்த சமயத்தில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்தியதும் தெரியவந்தது. 

மேலும், இந்த கடத்தல் சம்பவத்திற்கு லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பன்னீர் என்பவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். 

தொடர்ந்து, மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரவீன், ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பன்னீரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டு அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை பாராட்டினார்.

Next Story