சுங்கச்சாவடி கட்டண வசூல் மையம்


சுங்கச்சாவடி கட்டண வசூல் மையம்
x
தினத்தந்தி 29 Sept 2021 10:20 PM IST (Updated: 29 Sept 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்-நத்தம் சாலையில் சுங்கச்சாவடி கட்டண வசூல் மையம் அமைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோபால்பட்டி:

திண்டுக்கல்-நத்தம் சாலை விரிவாக்க பணி, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. அதன்படி இந்த சாலை 3 முதல் 5 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தப்படுகிறது. 

மேலும் நத்தத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களின் வசதிக்காக சாலையின் ஒருபுறத்தில் பேவர் பிளாக் கற்களால் ஆன நடைபாதை அமைக்கப்படுகிறது. 

இதேபோல் திண்டுக்கல் அருகே பொன்னகரம், குள்ளனம்பட்டி மற்றும் கோபால்பட்டி பகுதிகளில் சாலையின் இருபுறத்திலும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக பாலங்கள் கட்டப்படுகின்றன.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பணிகள், தற்போது மீண்டும் ெதாடங்கி உத்வேகம் பெற்றுள்ளன. இதற்கிடையே சாணார்பட்டி, கன்னியாபுரம், கணவாய்பட்டி பங்களா பகுதிகளில் உள்ள அபாயகரமான சாலை வளைவுகளை நேர் செய்யாமல் அப்படியே பணிகள் தொடர்வது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, யாரும் எதிர்பாராத வகையில் சாணார்பட்டியை அடுத்த கன்னியாபுரம் அருகே சுங்கச்சாவடி கட்டண வசூல் மையம் அமைப்பதற்கான பணி தொடங்கி இருப்பது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே சுங்கச்சாவடி கட்டண வசூல் மையம் அமைப்பதற்கான முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story