தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் கலெக்டர் மோகன் உத்தரவு
தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மோகன் தெரிவித்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 9,276 பேர் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் நேற்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
விழுப்புரம் அருகே கோலியனூர், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள், மணம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி, காணை வி.இ.டி. வித்யாமந்திர் பள்ளி,
கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி. பொறியியல் கல்லூரி, விழுப்புரம் அய்யூர்அகரம் நாஹர் பப்ளிக் பள்ளி, திண்டிவனம் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொல்லியங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லூரி, ஆகாசம்பட்டு ஸ்ரீஅரவிந்தர் கலை அறிவியல் கல்லூரி, களையூர் ராஜாதேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 13 இடங்களில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கலெக்டர் பார்வையிட்டார்
செஞ்சி, மேல்மலையனூர், களையூர் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டார். அப்போது அவர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி பேசியதாவது:-
தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முதல் நாளே வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், ஆவணங்கள் மற்றும் உரிய படிவங்கள் வரப்பெற்றதை உறுதிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள், முகவர்களுக்கு வாக்குப்பெட்டியை திறந்து காண்பித்து காலியாக உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பூசி
வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அவ்வப்போது கைகழுவும் திரவத்தை பயன்படுத்தி கையை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்கள் சுகாதாரத்துறை சார்பில் தேர்தல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடுநிலையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story