தேனியில் புதுப்பொலிவுடன் தயாராகும் நீச்சல் குளம்


தேனியில் புதுப்பொலிவுடன் தயாராகும் நீச்சல் குளம்
x
தினத்தந்தி 29 Sept 2021 10:22 PM IST (Updated: 29 Sept 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று நீச்சல் குளம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. இதை விரைவில் திறக்க வேண்டும் என வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி:
தேனியில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று நீச்சல் குளம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. இதை விரைவில் திறக்க வேண்டும் என வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீச்சல் குளம்
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 2015-ம் ஆண்டு நீச்சல் குளம் அமைக்கப்பட்டது. இந்த நீச்சல் குளத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மட்டுமின்றி மாநில அளவிலான போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பயிற்சி பெற்று வந்தனர். மாநில அளவிலான நீச்சல் போட்டிகளும் இங்கு நடத்தப்பட்டு வந்தன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்த நீச்சல் குளத்தில் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற தடை விதிக்கப்பட்டது. இதனால், நீச்சல் குளம் பயன்பாடு இன்றி காணப்பட்டது. இந்நிலையில் நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்திகரிக்கும் எந்திரம் பழுதானது. இதையடுத்து கடந்த 10 நாட்களாக சுத்திகரிப்பு எந்திரத்தை பழுதுபார்க்கும் பணிகள் மற்றும் நீச்சல் குளம் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
விரைவில் திறப்பு
நீச்சல் குளம் மராமத்து பணிகள் மற்றும் சுத்திகரிப்பு எந்திரம் சீரமைப்பு, ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தேக்கி வைத்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பும் தரைமட்ட தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இந்த பணிகள் நிறைவு பெற்று நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்திகரித்து நிரப்பும் பணி நடந்து வருகிறது. நீச்சல் குளம் தயாராகி வரும் நிலையில், நீச்சல் பயிற்சி பெறுவதற்கு இது மீண்டும் எப்போது திறக்கப்படும்? என நீச்சல் வீரர், வீராங்கனைகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விரைவில் நீச்சல் குளத்தை திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகனிடம் கேட்டபோது, "பராமரிப்பு பணிகள் பெரும்பகுதி நிறைவு பெற்றுள்ளன. மேலும் புதுப்பொலிவாக மாற்ற சிறு, சிறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீச்சல் குளம் சுமார் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து அதை சுத்திகரித்து நீச்சல் குளத்தில் நிரப்பும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பணிகள் நிறைவு பெற்று பயிற்சிக்கு நீச்சல் குளம் தயாராகிவிடும். அதன்பிறகு அரசின் வழிகாட்டுதல்படி நீச்சல் குளம் விரைவில் திறக்கப்படும்" என்றார்.

Next Story