பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விழாக்கள் நடத்தப்படும்-அமைச்சர் மதிவேந்தன்


பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விழாக்கள் நடத்தப்படும்-அமைச்சர் மதிவேந்தன்
x
தினத்தந்தி 29 Sept 2021 10:23 PM IST (Updated: 29 Sept 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விழாக்கள் நடத்தப்படும் என்று அதை ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

கடலூர், 

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தை நேற்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்வதற்காக வந்தார். பின்னர் அவர் சுற்றுலா மையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர், நுழைவு வாயில் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து படகு மூலம் சென்று மாங்குரோவ் காடுகளை பார்த்தபடி, அங்குள்ள சின்னத்திட்டு பகுதிக்கு சென்றார். அங்கு தங்கும் விடுதிகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் படகு ஓட்டுனர்களையும் பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு தங்கும் விடுதியை பார்வையிட்டார்.
 மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது.
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

படகு சவாரி

சிதம்பரம் அருகே அமைந்துள்ள பிச்சாவரத்தில் சதுப்பு நில காடுகள் சுமார் 1,100 எக்டேர் பரப்பளவில் உள்ளது. இது உலகின் 2-வது பெரிய சதுப்பு நில காடுகள் ஆகும். இங்குள்ள வெள்ளாறு மற்றும் கேலரூன் நதி அமைப்புகளால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் நீர்நிலைகள் படகு சவாரிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

பிச்சாவரம் படகு குழாம் 1984-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 3 முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் கூடுதல் வசதிகள் செய்து தரும் வகையில் படகு குழாம், பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் மேம்படுத்த அறிவிப்புகள் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி

பிச்சாவரத்தில் சுற்றுலா மையத்தை ஆய்வு செய்துள்ளோம். இங்கு மக்களின் பயன்பாட்டிற்காக தங்கும் விடுதி மற்றும் கழிவறைகள் சீரமைக்கப்படும். சுற்றுலா மையத்தில் படகு சவாரி நேரத்தை காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படுத்த வனத்துறை அதிகாரிகளோடு பேசி முடிவு எடுத்துள்ளோம். சுற்றுலா பகுதியில் கூடுதல் வசதிகளை கொண்டு வந்து பயணிகளை ஊக்குவிக்க என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இங்குள்ள சுற்றுலா தல ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா? என்றும் ஆய்வு செய்தோம்.

விழாக்கள்

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா? எனவும், பயணிகளுக்கு தற்காப்பு நடவடிக்கை அனைத்தையும் சொல்லித்தருகிறார்களா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். மேலும் பிச்சாவரம் படகு குழாம் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும். சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தங்கும் விடுதிகள் உடனடியாக பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு அளிக்க உணவகங்கள் மற்றும் சுற்றுலா அலுவலருக்கு அலுவலகம் அமைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கடல் உணவு திருவிழா, சுற்றுலா மையம் மற்றும் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விழாக்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையை சேர்ந்த சின்னத்திட்டு பகுதியை ஆய்வு செய்தோம், அங்குள்ள கட்டிடம் விரைவில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Next Story