பேரூரில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய பேராசிரியர் பணியிடை நீக்கம்


பேரூரில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய பேராசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 29 Sept 2021 10:29 PM IST (Updated: 29 Sept 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

பேரூரில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய பேராசிரியர் பணியிடை நீக்கம்

பேரூர்

கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவிக்கு ஆபாச படம்

கோவை பேரூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் பிரியா நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 47). இவர் பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் மற்றும் தமிழ் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் பேராசிரியர் திருநாவுக்கரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். 

சில நிமிடங்களில் ஆபாச புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். இதில், பேராசிரியர் அரை நிர்வாண நிலையில் புகைப்படம் எடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

கல்லூரி நிர்வாகத்திடம் புகார்

இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, உடனடியாக பேராசிரியர் அனுப்பிய குறுஞ்செய்திகளையும், புகைப்படங்களையும் சக மாணவ-மாணவிகளுக்கு அனுப்பி பேராசிரியரின் பாலியல் தொல்லை குறித்து தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அனைத்து மாணவிகளும் திரண்டு பேராசிரியர் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதற்கு ஆதரவாக முன்னாள் மாணவர்களும் அங்கு வந்தனர். 

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் சக மாணவ-மாணவிகள் பேராசிரியரின் தவறான நடவடிக்கைகள் குறித்து புகார் மனுவாக எழுதி கல்லூரி செயலரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.  

பேராசிரியர் பணியிடை நீக்கம்

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த கல்லூரி செயலர் உத்தரவிட்டார். இந்த விசாரணையில், பேராசிரியர் திருநாவுக்கரசு, கல்லூரி மாணவிக்கு ஆபாச செய்தி, படங்கள் அனுப்பியது உறுதியானது. இதையடுத்து அவரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில் தவறு செய்த பேராசிரியர் திருநாவுக்கரசை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என்று கூறி கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கல்லூரியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பேரூர் தாசில்தார் ரமேஷ், பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கல்லூரி மாணவ-மாணவிகள் கூறுகையில், பேராசிரியர் திருநாவுக்கரசு பல ஆண்டுகளாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். 

இதற்கு அதிகாரிகள், பேரூர் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கல்லூரி சார்பில் விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து  மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் ஆபாச குறுஞ்செய்தி, படங்கள் அனுப்பிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story