4 பேர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு
நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்ற விவகாரத்தில் 4 பேர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்ற விவகாரத்தில் 4 பேர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயற்சி
நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி அதிகாலை நாகை கீச்சாங்குப்பத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி உள்பட சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பைபர் படகில் இருந்தவர்கள், சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த படகில் சோதனை செய்தனர். அப்போது மீன்பிடி வலைகளுக்கு இடையே மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்ததும், கடலுக்கு மீன்பிடிக்க செல்வதுபோல பைபர் படகில் கஞ்சாவை பதுக்கி வைத்து, அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
படகு-மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இதையடுத்து 10 மூட்டைகளில் இருந்த ரூ.1½ கோடி மதிப்புள்ள 280 கிலோ கஞ்சா, மீன்பிடி வலைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள், பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவைகளை நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மோட்டார் சைக்கிள்கள் யாருடையது? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அதிகாரிகளின் விசாரணையில், படகு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த குணசீலனுக்கு சொந்தமானது என்பதும், மற்ற 3 மோட்டார் சைக்கிள்களும் நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த சிவசந்திரன், மற்றொரு குணசீலன் மற்றும் சேவாபாரதியை சேர்ந்த சதீஷ் ஆகியோருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.
அதிரடி சோதனை
இந்த நிலையில் நேற்று மாலை நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, ரமேஷ், சிவக்குமார், கஜேந்திரன் ஆகியோர் 5 குழுக்களாக 30 பேர் பிரிந்து ஒரே நேரத்தில் 4 பேரின் வீடுகளுக்கும் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் 4 பேரின் வீடுகளில் இருப்பவர்களிடமும் ஆதார் உள்பட அடையாள அட்டைகளை வாங்கி துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 பேரும் எங்கு தப்பி சென்றுள்ளனர்?. இதற்கு முன்பு அவர்கள் வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை. சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையால் நாகையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story