அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை


அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் சந்திரகலா ஆலோசனை நடத்தினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் சந்திரகலா ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சந்திரகலா தலைமையில் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் சந்திரகலா கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை சீர்படுத்தும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
 இறுதியாக வெளியிடப்பட்ட வரைவு மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியலின்மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கோரப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கும் பணியினை இறுதி செய்து அரசுக்கு முடிவான முன்மொழிவுகள் அனுப்புவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்படுகிறது.

1,369 வாக்குச்சாவடி மையங்கள்

இம்மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,369 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு வாக்குச்சாவடி மையம் ஏற்படுத்தவும், பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் 6 வாக்குச்சாவடிகளுக்கிடையில் பிரிவுகளை மாற்றம் செய்வதற்கும், வாக்குச்சாவடி கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 26 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடம் மற்றும் அமைவிடங்களை மாற்றியமைப்பதற்கும், 12 வாக்குச்சாவடிகளுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வருவாய் கோட்டசியர்கள் ராமநாதபுரம் சேக் மன்சூர், பரமக்குடி முருகன், நேர்முக உதவியாளர் பழனிகுமார் உள்பட அரசு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story