அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீர் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:
அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீர் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தில் ஆய்வு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் நேற்று இரவு காரில் தர்மபுரிக்கு புறப்பட்டார். அதியமான்கோட்டை பகுதியில் அவருக்கு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அந்த பகுதியின் அருகே உள்ள அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு 8.17 மணிக்கு முதல்-அமைச்சரின் கார் திடீரென நுழைந்தது.
காரில் இருந்து இறங்கிய முதல்-அமைச்சர் அந்த போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த முதல்-அமைச்சர் பொதுநாட்குறிப்பு, தினசரி பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். நேற்று போலீஸ் நிலையத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார்.
புகார் மனுக்கள்
போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள வார விடுமுறை சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்றும் கேட்டார். போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டிருப்பதும், இ.டி.ஆர். குறைப்பு கைவிடப்பட்டிருப்பதும் மிகவும் உதவியாக உள்ளது என்று அப்போது அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து புகார் மனுக்களை விசாரிக்கும் முறை, முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மூலம் அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீது எப்படி விசாரணை நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இத்தகைய மனுக்கள் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரடி விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று போலீசார் பதிலளித்தனர்.
நலம் விசாரித்தார்
இதைத் தொடர்ந்து குறைகள், கோரிக்கைகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார். 10 நிமிடங்கள் போலீஸ் நிலையத்தில் ஆய்வு நடத்திய முதல்- அமைச்சர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது போலீஸ் நிலைய வளாகத்தின் வெளிப்பகுதியில் திரண்டிருந்த, போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு துப்பாக்கிகள் மாயமான இந்த போலீஸ் முதல்-அமைச்சரின் திடீர் ஆய்வு செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆய்வின்போது, கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) தாமரைக்கண்ணன், நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story