புதுக்கோட்டையில் ரூ.15¾ கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு: அரசு ஊழியரின் வீடு உள்பட 6 இடங்களில்லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன


புதுக்கோட்டையில் ரூ.15¾ கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு: அரசு ஊழியரின் வீடு உள்பட 6 இடங்களில்லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன
x
தினத்தந்தி 30 Sept 2021 12:36 AM IST (Updated: 30 Sept 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.15¾ கோடி சொத்து சேர்த்ததாக அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீடு, சகோதரர்கள் வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

புதுக்கோட்டை:
அரசு ஊழியர்-மனைவி 
புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் முருகானந்தம். இவரது வீடு புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ளது. இவரது மனைவி காந்திமதி புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
முருகானந்தத்தின் சகோதரர் பழனிவேல் ஒப்பந்ததாரர் ஆவார். மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடுக்காகாட்டில் தனித்தனியே வீடுகள் உள்ளது. பழனிவேல் அரசு ஒப்பந்த வேலைகளை எடுத்துச் செய்து வந்தார். கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் நகராட்சி, உள்ளாட்சிகளில் எல்.இ.டி., சூரிய ஒளி மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார்.
தம்பதி மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் முருகானந்தம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.15 கோடியே 73 லட்சத்து 53 ஆயிரத்து 381 மதிப்பில் சொத்து சேர்த்ததாக முருகானந்தம், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். 
இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பீட்டர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று காலை 6.30 மணி அளவில் புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். வீட்டில் முருகானந்தத்தின் மனைவி காந்திமதி மற்றும் மகன், மகள் இருந்துள்ளனர்.
6 இடங்களில் சோதனை
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது வீட்டின் முன்பு பாதுகாப்பு பணிக்கு போலீசார் ஈடுபட்டிருந்தனர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதேபோல புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே முருகானந்தத்தின் சகோதரர் பழனிவேல் வணிக வளாக அலுவலகத்திலும், புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள விஜய் மகளிர் தங்கும் விடுதியிலும் சோதனை நடந்தது. அதேபோல் முருகானந்தத்தின் சொந்த ஊரான கடுக்காகாட்டில் உள்ள அவரது மனைவியும் ஊராட்சி மன்ற தலைவருமான காந்திமதி, மற்றும் சகோதரர்கள் பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோரின் வீடுகளில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், சிவகங்கை துணை சூப்பிரண்டு மணிமன்னன் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 7 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை சோதனை நடத்தினர். 
ஒரே நேரத்தில் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதற்காக பக்கத்து மாவட்டங்களில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்
சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தத்தின் வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான ஒரு வளாகத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம், குடோன் உள்ளது. அதிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முருகானந்தத்தின் மகன் கண்ணன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், அதற்காகவும், மற்றவர்கள் பயிற்சி பெறும் வகையில் தனியாக இந்த பயிற்சி மையம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
இந்த மையம் மற்றும் குடோனின் மதிப்பை லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கிட்டு முருகானந்தத்தின் மகன் கண்ணன், மனைவி காந்திமதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கடுக்காகாட்டில் நேற்று மதியம் சோதனையை முடித்து விட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் புறப்பட்டனர். 
முக்கிய ஆவணங்கள்கைப்பற்றப்பட்டன 
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தத்தின் வீட்டில் சோதனை நேற்று இரவு 9.30 மணிக்கு மேலும் நீடித்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனையால் புதுக்கோட்டையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
பகுதி நேர கிளார்க்காக அரசு பணியில் சேர்ந்து உதவியாளரான
முருகானந்தம் குவித்த சொத்துகள் விவரம் 
அரசுத்துறையில் பகுதி நேர கிளார்க்காக சேர்ந்து உதவியாளரான முருகானந்தம் குவித்த சொத்துகள் பற்றி முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
நடுத்தர குடும்பம்
புதுக்கோட்டை மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் உதவியாளராக கடந்த 4-9-2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் முருகானந்தம். இவர் கடந்த 28-12-2015-ம் ஆண்டு முதல் 3-9-2019-ம் ஆண்டு வரை உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். முருகானந்தத்தின் மனைவி காந்திமதி முள்ளுக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். இவர்கள் இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார்கள் வந்துள்ளன. முருகானந்தம் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா முள்ளுக்குறிச்சி ஆகும். இவர் வேப்பங்குடி ஊராட்சியில் பகுதி நேர கிளார்க்காக வேலைக்கு சேர்ந்து கடந்த 30-10-1996-ம் ஆண்டு முதல் 31-08-2016-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
உதவியாளராக பதவி உயர்வு
அதன்பின் ஊராட்சி உதவியாளர் கிரேடு-2 ஆக வேப்பங்குடி ஊராட்சியில் 1-9-2006 முதல் 3-6-2013-ம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் உதவியாளராக பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்தில் 28-12-2015 முதல் 3-9-2019- வரை வேலைபார்த்தார். 
சொகுசு கார்
முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோர் கடந்த 1-1-2017 முதல் 30-6-2020 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். இவர்கள் புதுக்கோட்டை நகரம் மற்றும் மாவட்ட பகுதியில் வீடு மற்றும் விவசாய நிலங்களை வாங்கியுள்ளனர். கடந்த 2107-ம் ஆண்டில் சார்லஸ் நகரில் ஒரு வீட்டு மனையும், 2018-ம் ஆண்டில் திருக்கோகர்ணத்தில் ஒரு பிளாட், 2019-ம் ஆண்டில் சாந்தநாதபுரத்தில் ஒரு வீட்டு மனையும், கடந்த 2020-ம் ஆண்டில் சத்தியமூர்த்தி சாலையில் வணிக வளாகம், அரண்மனை நகரில் 2 பிளாட், ஒரு வீட்டு மனையும், சாந்தநாதபுரத்தில் ஒரு பிளாட் வாங்கியுள்ளார். கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ.12 கோடியே 83 லட்சத்து 97 ஆயிரத்து 401 மதிப்பில் 38.738 சதுர அடி இடம் வாங்கியுள்ளார். மேலும் ரூ.62 லட்சம் 2 ஆயிரத்து 499 மதிப்பில் விவசாய நிலங்களை முள்ளங்குறிச்சி, வேப்பன்குடி கிராமத்தில் வாங்கியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் மனைவி பெயரில் ரூ.70 லட்சத்து 43 ஆயிரத்து 921 மதிப்பில் பென்ஸ் கார் ஒன்று வாங்கியிருக்கிறார். முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான முகாந்திரம் இருப்பதால
பணியில் விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தாரா?
முருகானந்தம் உதவியாரளாக புதுக்கோட்டையில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதாக சம்பந்தப்பட்ட துறையில் கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடிதத்தை நிர்வாகம் நிராகரித்துள்ளது. மேலும் அவரை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவர் புதுக்கோட்டையில் பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள முருகானந்தம், கோவை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர் எனக்கூறப்படுகிறது. அவர் மூலம் கடந்த ஆட்சியில் பல ஒப்பந்தங்களை தனது சகோதரர் பெயரில் எடுத்து பணிகள் மேற்கொண்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது புதுக்கோட்டையிலும் சோதனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
வீட்டின் முன்பு திரண்ட ஆதரவாளர்கள்
புதுக்கோட்டை சார்லஸ் நகரில் முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நேற்று காலையில் தொடங்கிய இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. இந்த சோதனையின்போது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள், கிராமத்தை சேர்ந்தவர்கள் திரண்டு நின்றிருந்தனர். கூட்டம் கூடிய நிலையில் போலீசார் அவர்களை விரட்டி அனுப்பி வைத்தனர்.
இதேபோல் முள்ளங்குறிச்சியில் உள்ள காந்திமதி முருகானந்தம் வீட்டின் முன் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து புகார் மனு தெரிவிக்க திரண்ட பொதுமக்களை போலீசார் சோதனை நடைபெறுவது குறித்து கூறி அனுப்பி வைத்தனர். 
16 மணி நேரம் நடந்த சோதனையில்
83 பவுன் நகைகள் பறிமுதல்
புதுக்கோட்டை சார்லஸ் நகரில் முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த சோதனையில் 83 பவுன் நகைகள், 3 கிலோ 700 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.46 ஆயிரத்து 160 ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். மற்ற இடங்களில் சோதனை நிறைவடைந்ததில் அங்கு கைப்பற்றப்பட்டவை குறித்து போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை. சோதனை 16 மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story