பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்
நெல்லையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
நெல்லை:
மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களை வந்து சேர உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்று மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
ஆலோசனை கூட்டம்
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா, நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன், நிர்வாகி கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பணபலம், படைபலம் அனைத்தையும் தாண்டி பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். 6 மாதத்துக்கு முன்பு தி.மு.க. பொய் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு தி.மு.க. சொன்னது வேறு. இப்போது அவர்கள் செயல்படுத்துவது வேறு.
நல்லவர்களுக்கு வாய்ப்பு
தி.மு.க.வின் பிரசாரம் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வினர் தங்களுக்கு வேண்டாதவர்களின் வேட்புமனுவை நிராகரித்து உள்ளனர். இதனால் முதல்-அமைச்சர் வீட்டு முன்பு வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த அளவுக்கு அவர்களின் நிலைமை மோசமாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நல்லவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளை திறந்து தான் ஆக வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தடுப்பூசி போடாதவர்கள். எனவே, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் முறையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. மோடி அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்றதாக உள்ளது.
இவர் அவர் கூறினார்.
தேர்தல் பிரசாரம்
தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். பிரதமர் மோடியின் திட்டங்கள் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூலமாக உங்களை நேரடியாக வந்தடைய வாய்ப்பு கொடுங்கள். மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் மூலம் கிராமப்புறங்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.
வெற்றிபெற செய்யுங்கள்
மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசின் திட்டம் போல் செயல்படுத்தி வருகிறார்கள். தி.மு.க.வினர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் 80 சதவீத திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் தான்.
எனவே, மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக உங்களை வந்து சேர பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நெல்லை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மானூர் யூனியன் பகுதியில் பிரசாரம் செய்தார்.
Related Tags :
Next Story