புகார்பெட்டி
‘தினத்தந்தி’ புகார்பெட்டிக்கு 8939078888 என்ற ‘வாட்ஸ்- அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை கோவில் பாப்பாக்குடி மீனாட்சி நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளின் முன்பும், சாலைகளிலும் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
ஜெயா, கோவில் பாப்பாக்குடி.
ஆபத்தான மின்கம்பங்கள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள காட்டுகுடி விலக்கு பகுதியில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அவைகள் சிமெண்டு பூச்சுகள் உடைந்து, கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பங்கள் எப்போது சாய்ந்து விழும் என்ற அச்சத்தில் உள்ளோம். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைப்பார்களா?
சந்தானம், காட்டுக்குடி.
வேகத்தடை வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புலவர் அப்பா தர்கா அருகில் வேகத்தடை இல்லை. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் சாலையை கடந்து செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
அபுமா அபுபக்கர், ஆர்.எஸ்.மங்கலம்.
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், மகாராஜபுரம் ஊராட்சி சதுரகிரி அடிவாரம் வண்டிப்பண்ணையில் உயர் கோபுர மின்விளக்கு ஒன்று உள்ளது. இந்த மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், சதுரகிரி.
பயணிகள் நிழற்குடை தேவை
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு புது விளாங்குடியில் மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இ்ங்கு வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் முதியவர்களும், கர்ப்பிணிகளும் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
மயில்சாமி, புது விளாங்குடி.
தூர்வாரப்படாத கால்வாய்
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் அ.புத்தூர் ஊராட்சி அரியகுடி கண்மாய் கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதன் காரணமாக கண்மாய்க்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. இதனால் விவசாயிகள்் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், போகலூர்.
திறக்கப்படாத கட்டிடம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 9 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால் இதுகட்டப்பட்டு இதுநாள் வரையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், கல்குறிச்சி.
மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா ஏரியூருக்கு தினமும் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து பஸ் வந்து சென்றது. கடந்த சில மாதங்களாக இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல திருப்பத்தூர் முதல் ஏரியூர் கீழவளவு வழியாக சிங்கம்புணரி சென்று வந்த பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ஏரியூர்.
சாலை அமைப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் கீழராமநதி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி, சாக்கடை கழிவுநீரும், மழைநீரும் கலந்து தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மைதீன், கமுதி.
அடிப்படை வசதி தேவை
மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியம் எம்.எஸ்.புரத்தில் அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பார்களா?
பொதுமக்கள், சேடப்பட்டி.
Related Tags :
Next Story