நெல்லை சந்திப்பு தற்காலிக பஸ்நிறுத்தம் திடீர் இடமாற்றம்; பயணிகள் கடும் எதிர்ப்பு


நெல்லை சந்திப்பு தற்காலிக பஸ்நிறுத்தம் திடீர் இடமாற்றம்; பயணிகள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 Sept 2021 1:20 AM IST (Updated: 30 Sept 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு தற்காலிக பஸ்நிறுத்தம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நெல்லை:
நெல்லை சந்திப்பு தற்காலிக பஸ் நிறுத்தம் நேற்று திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள், குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. 
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையமும் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நெல்லை சந்திப்பிற்கு வரும் பஸ்கள் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு நிறுத்தப்பட்டது.

பஸ் நிறுத்தங்கள்

இதற்கு மாற்றாக நகர பஸ்கள் நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு வரக்கூடிய சர்குலர் பஸ்கள் மட்டுமே நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்து செல்கிறது. இந்த பஸ்களில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. 
நெல்லையில் இருந்து அம்பை, பாபநாசம், முக்கூடல், கடையம், செங்கோட்டை, ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய புறநகர் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தாமிரபரணி ஆற்று பாலம், ஈரடுக்கு மேம்பாலம் வழியாக செல்கின்றன. இந்த பஸ்களில் ஏறிச் செல்வதற்காக நெல்லை சந்திப்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகில் தெற்கு பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளது. 
இதேபோல் தென்காசி, கடையம், பாபநாசம், சுரண்டை, செங்கோட்டை உள்ளிட்ட மேற்கு பகுதியில் இருந்து பஸ்களில் வரும் பயணிகள் இறங்கி, ஏறுவதற்காக நெல்லை சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் ஒரு தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு இருந்தது.
நெல்லை சந்திப்பு பகுதிக்கு வருகிறவர்களும், மருத்துவமனை மற்றும் சந்திப்பு பகுதியில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரி மற்றும் அலுவலகங்களுக்கு வருபவர்களும் பஸ்சில் இருந்து இறங்கி தங்களுடைய அலுவலகங்களுக்கு செல்வார்கள்.

திடீர் இடமாற்றம்

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் செயல்பட்டு வந்த தற்காலிக பஸ் நிறுத்தத்தை நேற்று முதல் கொக்கிரகுளத்திற்கு போக்குவரத்து போலீசார் அதிரடியாக இடம் மாற்றம் செய்தனர்.
இதனால் மருத்துவமனையில் இருந்து திரும்பி செல்லும் நோயாளிகள், முதியவர்கள், பெண்கள் கொளுத்தும் வெயிலில் நடந்தே கொக்கிரகுளம் செல்லும் நிலை ஏற்பட்டது. சில பயணிகள் வழக்கம் போல் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
மேலும் தென்காசி, சுரண்டை, கடையம் உள்ளிட்ட மேற்கு பகுதியில் இருந்து பஸ்சில் வந்த பயணிகள் கொக்கிரகுளம் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அந்த பயணிகள் அங்கு இருந்து நெல்லை சந்திப்புக்கு நடந்தே வந்தனர்.

பயணிகள் கடும் எதிர்ப்பு

ஸ்ரீ்புரத்திற்கு அடுத்த படியாக கொக்கிரகுளத்தில் மட்டுமே பயணிகள் இறங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ் நிறுத்தம் மாற்றப்பட்டதற்கு நெல்லை சந்திப்பில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு செல்வோர் மற்றும் ரெயில் நிலையம் செல்லும் பயணிகள், பூ மார்க்கெட்டு-ஆஸ்பத்திரிகளுக்கு செல்வோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், நெல்லை சந்திப்பு பகுதிக்கு வரும் எங்களுக்கு இந்த தற்காலிக பஸ்நிறுத்தம் இல்லை என்றால் அவதிக்குள்ளாவோம். எனவே, இந்த பஸ் நிறுத்தம் தொடர்ந்து செயல்பட வேண்டும். சந்திப்பு பஸ் நிலையம் திறக்கும் வரை கட்டாயம் இந்த பஸ் நிறுத்தம் செயல்பட வேண்டும்.
மேலும், ரெயில் நிலையம் மற்றும் அலுவலகங்கள், வணிக நிறுவனங்களுக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சந்திப்பு பகுதிக்கு மக்கள் வர முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதுதொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்து முன்னணி கோரிக்கை

இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனை முன்பு பஸ் நிறுத்தம் பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒற்றை பாலம் இருந்து போக்குவரத்து நெருக்கடியான காலகட்டத்தில் கூட அங்கு பஸ் நிறுத்தம் இருந்தது. ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள், முதியவர்கள் எளிதாக பஸ் ஏறி இறங்க வசதியாக அங்கு பஸ் நிறுத்தம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. 
தற்போது இந்த பஸ் நிறுத்தம் கொக்கிரகுளத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே, தொடர்ந்து இந்த பஸ் நிறுத்தம் செயல்பட நவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story