புது பெண் தற்கொலை; தென்காசி கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
புது பெண் தற்கொலை செய்தது தொடர்பாக தென்காசி கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
தென்காசி:
புளியங்குடியில் புதுப்பெண் தற்ெகாலை தொடர்பாக தென்காசி கலெக்டர் அலுலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுப்பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடி போலீஸ் சரகம் நெல் கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் சிவ ரம்யா. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாண்டியராஜா மகன் சிவ குமாரசாமி என்ற துரை என்பவருக்கும் கடந்த 25-4-2021 அன்று திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி புதுப்பெண் சிவ ரம்யா கணவரின் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். அவரை கணவரின் வீட்டார் மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முற்றுகை போராட்டம்
சிவ ரம்யாவின் உடல் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் சிவரம்யாவின் தந்தை முருகன் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 100 பேர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள், சிவ ரம்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடித்து கொலை செய்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுத்த பிறகுதான் உடலை வாங்குவோம் என்றும் கூறினர். மேலும் அலுவலக வளாகத்தில் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
உதவி கலெக்டர் விசாரணை
நீண்ட நேரம் அவர்கள் அங்கேயே அமர்ந்து இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இல்லாததால் தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சிவரம்யாவின் உடல் பிரேத பரிசோதனை முடிவு வெளியானதும் அதனை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story