வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு- தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு
தென்காசியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை, தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு செய்தார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பை தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு செய்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் 754 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் 574 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 1,328 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 10 ஆயிரத்து 678 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
வருகிற 6-ந் தேதி அன்று முதல் கட்டமாக கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2-ம் கட்டமாக 9-ந் தேதி தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர், குருவிகுளம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
பயிற்சி வகுப்பு
தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கடந்த 24-ந் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. அதில் கடையம் வட்டாரத்திற்கு உட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியிலும், கீழப்பாவூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும், ஆலங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்புகளை தென்காசி மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.
முறையாக பயிற்சி
வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தேர்தல் அலுவலர்களிடம் தேர்தலின் போது ஆள்மாறாட்டம், ஒருவரின் அடையாளத்தை எதிர்த்தல், வாக்குச்சீட்டைப் பெற்றுக் கொண்டு வாக்களிக்க மறுத்தல் போன்ற நிகழ்வுகளை எவ்வாறு கையாள்வீர்கள் என மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் கேள்வி கேட்டு, அதற்கான விளக்கத்தினையும் தெளிவுபடுத்தினார். மேலும் ஒவ்வொரு தேர்தல் படிவத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை தேர்தல் நாளன்று சரியாக பூர்த்தி செய்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
பயிற்சியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யும் பொருட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலரைக் கொண்டு வாக்குப்பெட்டிகளை திறக்கக்கோரியும் மற்றும் மூடி முத்திரையிடச் செய்தும் பரிசோதனை செய்தார். இதில் உதவி திட்ட அலுவலர் (தேர்தல்) சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கடையம்) திலகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story