சிவகாசியில் குடிநீர் பிரச்சினை ஏற்படுமா?


சிவகாசியில் குடிநீர் பிரச்சினை ஏற்படுமா?
x
தினத்தந்தி 30 Sept 2021 2:22 AM IST (Updated: 30 Sept 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அணை வறண்ட நிலையில் இருப்பதால் சிவகாசியில் குடிநீர் பிரச்சினை ஏற்படுமா? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

சிவகாசி, 
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 21 ஆயிரத்து 953 குடியிருப்புகள் உள்ளன. அதில் 13 ஆயிரத்து 834 குடிநீர் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது.
 நகர பகுதியில் தற்போது வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வெம்பக்கோட்டை அணை பகுதியில் இருந்து 14 லட்சம் லிட்டர் தண்ணீரும், மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் 25 லட்சம் லிட்டர் தண்ணீரும், உள்ளூரில் இருந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீரும் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது வெம்பக்கோட்டை அணை வறண்டுள்ள நிலையில் ராஜபாளையம் பகுதியில் மழை பெய்தால் மட்டுமே வெம்பக்கோட்டை அணைக்கு தண்ணீர் வரும் சூழ்நிலையில் மாவட்டத்தில் பல பகுதியில் மழை பொழிவு குறைவாகவே உள்ளது.
உறைக்கிணறு 
வெம்பக்கோட்டை அணை வறண்டு விட்டதால் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது செய்யப்பட்டு வரும் குடிநீர் வினியோகம் பாதிக்கும் என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதுகுறித்து சிவகாசி நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
வெம்பக்கோட்டை அணை வறண்டு வருவதற்கு போதிய மழை இல்லாதது தான் காரணம். அணையில் உள்ள 3 உறைக்கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சிவகாசி நகராட்சியில் உள்ள பகுதிகளுக்கு தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க மேலும் ஒரு உறைக்கிணற்றில் இருந்து குடிநீர் எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வரை 55 லட்சம் லிட்டர் தினமும் கிடைத்து வந்தது. 
பாதிப்பு இல்லை 
தற்போது அது 49 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. புதிய உறைகிணறு சரி செய்யப்பட்ட பின்னர் தற்போது உள்ள நிலை சரியாகும். 
எனவே சிவகாசி நகராட்சி பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தேவையான தண்ணீர் வருவதால் தற்போதைக்கு பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story