குறைந்தபட்ச ஆதார விலையுடன் சேலம், மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சைப்பயிறு கொள்முதல் கலெக்டர் கார்மேகம் தகவல்


குறைந்தபட்ச ஆதார விலையுடன் சேலம், மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சைப்பயிறு கொள்முதல் கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 30 Sept 2021 2:33 AM IST (Updated: 30 Sept 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் ஒரு கிலோ பச்சைப்பயிறு ரூ.72.75 என்ற குறைந்தபட்ச ஆதார விலையுடன் சேலம், மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்
பச்சைப்பயிறு சாகுபடி
இது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கிடவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது பச்சைப்பயிறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், விளைவித்த பச்சைப்பயிறு மத்திய அரசின் ‘நாபெட்' நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் 400 டன் பச்சைப்பயிறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேலம், மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் முதன்மை கொள்முதல் முகமைகளாக செயல்பட உள்ளது. 
இந்த மையங்களில் பச்சைப்பயிறு ஒரு கிலோ ரூ.72.75 என்ற குறைந்தபட்ச ஆதாரவிலையில் வருகிற 12-ந்தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
சேலம், மேச்சேரியில் கொள்முதல்
கொள்முதல் செய்யப்படும் பச்சைப்பயிறுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சைப்பயிறு சராசரி தரத்துடன் இருக்க வேண்டும். 
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் சேலம் அல்லது மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் பச்சைப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், சேலம் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story