சிறு, குறு நிறுவனங்களை வளர்த்தெடுக்க தேவையான அனைத்தையும் தி.மு.க. அரசு செய்யும் மு.க.ஸ்டாலின் உறுதி


சிறு, குறு நிறுவனங்களை வளர்த்தெடுக்க தேவையான அனைத்தையும் தி.மு.க. அரசு செய்யும் மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 30 Sept 2021 2:34 AM IST (Updated: 30 Sept 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு நிறுவனங்களை வளர்த்தெடுக்க தேவையான அனைத்தையும் தி.மு.க. அரசு செய்யும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

சேலம், செப்.30-
சேலம் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மிகப்பெரிய பாதிப்பு
கொரோனா என்ற பெருந்தொற்று மக்களின் உடல்நலத்திலும், மனநலத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதுபோல மக்களின் வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக, சிறு, குறு நிறுவனங்கள் அதிகமான நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை பெற்றது.
இப்படிப்பட்ட சூழலையும் கொரோனாவுடன் சேர்த்து பொருளாதார பாதிப்பையும் வென்றவர்கள்தான் இந்த சிறு, குறு நிறுவனங்களைச் சார்ந்திருக்கக்கூடிய நீங்கள் என்பது நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில், உங்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். இனி நடப்பது எல்லாம் நல்லதே என்ற எண்ணத்துடன் நாம் செயல்பட்டாக வேண்டும்.
சாதனைகள்
பெரும்பாலும் சிறு, குறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூடியிருக்கும் கூட்டம் என்கிற காரணத்தால், அந்த துறைக்கு, அதாவது உங்கள் துறைக்கு செய்யப்பட்ட ஒரு சில சாதனைகளை மட்டும் நான் உங்களிடத்தில் பட்டியலிட விரும்புகிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதங்களில், ரூ.168 கோடி (முதலீட்டு மானிய நிதியில் 60 சதவீதம்) விடுவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களை இயக்குவதற்கான உரிமம், தீயணைப்பு உரிமம் உள்ளிட்ட 15 உரிமங்களின் புதுப்பித்தல், அதனுடைய கெடு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளில் இருந்து குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடன் பெறும்போது, கடன் ஆவணங்களை இணைய வழியில் பதிவு செய்வதற்கு வழிவகை செய்யக்கூடிய வகையில் சட்டசபையிலேயே அந்த மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
5 புதிய தொழிற்பேட்டைகள்
வான்வெளி, பாதுகாப்பு, மருந்தியல், பெட்ரோகெமிக்கல், உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் மின்வாகனங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் 5 மிகப்பெரிய தொழிற்கொத்துகள் ஒவ்வொரு துறைக்கும் தலா ரூ.500 கோடி முதலீட்டில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எளிதாக கடன்பெறுவதற்கு மாநில அளவில் கடன் உத்தரவாதத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 புதிய தொழிற்பேட்டைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பயன்பெறக்கூடிய வகையில் டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய வேளாண்-தொழில் வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையை மதிப்பாய்வு செய்வதற்கான வழிவகைகளை பரிந்துரைக்க  சுந்தரதேவன் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வாடகை வீடுகள் திட்டம்
4 சேகோசர்வ் கிடங்குகள் ரூ.45 கோடியில் நவீனப்படுத்தப்படுவதோடு, ரூ.40 கோடியில் புதிய கிடங்கு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் சென்னையில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனப் பணியாளர்களுக்கான குறைந்த விலையில் வாடகை வீடுகள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சத்துக்கு குறைந்த கொள்முதல்களில், முன் அனுபவம் மற்றும் முந்தைய விற்பனை மதிப்பு போன்ற ஒப்பந்த நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் முதலீடுகளுக்கு உதவும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன ஏற்றுமதியாளர்களுடன் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலமாக, ரூ.240 கோடி முதலீடும் 2 ஆயிரத்து 545 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாட்டின் 2 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சிறந்த ஏற்றுமதியாளர்களாக உயர்த்தவும், அவர்கள் தங்கள் பொருட்களை இணையத்திலும் வெளியிலும் சந்தைப்படுத்துவதை மேம்படுத்தவும் ப்ளிப்கார்ட் - வால்மார்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
இவை அனைத்தும் 4 மாதத்தில் நிறைவேற்றப்பட்டவை ஆகும். இதுபோன்ற திட்டங்கள் வரிசையாக அணிவகுக்க தயாராக இருக்கிறது. சிறு, குறு நிறுவனங்களை வளர்த்தெடுக்க தேவையான அனைத்தையும் இந்த அரசு செய்யும் என்ற உறுதியை இக்கூட்டத்தின் மூலமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
முக்கிய முனையம்
சென்னை, ஓசூர், சேலம், கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களை உள்ளடக்கி இந்திய அரசால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ராணுவத் தளவாடத் தொழில் உற்பத்தித் தடத்தில் சேலம் ஒரு முக்கிய முனையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
பாராசூட் துணிகள், ராணுவச் சீருடைத் துணிகள் போன்ற நுட்பமிகு துணிகளைத் தயாரிக்கவும், ஹெலிகாப்டர் பாகங்களை ஒன்றாகப் பொருத்தவும் சேலத்தில் அதிகமான வாய்ப்பு உள்ளது. ஒரு மாபெரும் உணவுப்பூங்கா (பி.லிட்) அமைப்பதற்கென பெரிய சீரகாபாடியில் 56.81 ஏக்கர் நிலம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தால் கண்டறியப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
ஜவ்வரிசி தொழிற்கொத்து
கஞ்சிநாயக்கன்பட்டியில் 11 ஏக்கர் நிலத்தில் வேளாண் பொருள்சார் தொழிற்கொத்து வரவுள்ளது. இதற்காக, நிலங்களைச் சமன்படுத்தும் பணிகள் முடிவடைந்திருக்கிறது. அலுவலகம் மற்றும் கிடங்குக் கட்டிடங்கள் அமைப்பதற்கான பணிகள் சேலம் மார்க்கெட்டிங் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ரூ.247.17 லட்சம் திட்ட மதிப்புடைய ஜவ்வரிசித் தொழிற்கொத்து ஒன்றும்; ரூ.501.10 லட்சம் திட்ட மதிப்புடைய கயிறு தொழிற்கொத்துகள் இரண்டும்; ரூ.1532.74 லட்சம் திட்ட மதிப்புடைய இரும்பு தொழிற்கொத்து ஒன்றும் நிறுவப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
தொழிற்கொத்துகள்
ரூ.1333.96 லட்சம் திட்ட மதிப்புடைய விசைத்தறித் தொழிற்கொத்து, ரூ.14446.33 லட்சம் மதிப்பிலான அறைகலன் தொழிற்கொத்து, ரூ.1346.50 லட்சம் மதிப்பில் அச்சுத் தொழிற் கொத்து, ரூ.248.96 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கொலுசுத் தொழிற்கொத்து ஆகியவை செயல்பாட்டுக்கு வர உள்ளன.
தம்மம்பட்டியில் மர வேலைப்பாடுகள் தொழிற்கொத்து, கொங்கணாபுரத்தில் வெல்லத் தொழிற்கொத்து, ஜலகண்டபுரத்தில் விசைத்தறித் தொழிற்கொத்து ஆகியவற்றை நிறுவுவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
உங்கள் அரசு
இதுபோன்ற நல்ல பல செயல்களைத் தொடர்ந்து செய்வோம். அரசுக்கு, உங்கள் கோரிக்கைகளைத் தயங்காமல் கேளுங்கள். அதனைப் பரிசீலித்து படிப்படியாக நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். நான் தொடர்ந்து சொல்கிறேன். இந்த அரசு என்பது தனிப்பட்ட என்னுடைய அரசு அல்ல, உங்களுக்கு பாடுபடக்கூடிய, பணியாற்றக்கூடிய அரசுதான் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். இது உங்கள் அரசு. உங்கள் அரசுக்கு உரிமையோடு கோரிக்கை வையுங்கள், அதைசெயல்படுத்துவதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு, நிச்சயமாக நாங்கள் துணை நிற்போம். அதுபோன்று நீங்களும் எங்களுக்கு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில், ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள், விசைத்தறி மற்றும் வெள்ளிக் கொலுசு தொழில்முனைவோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story