மருமகளை கத்தியால் குத்திவிட்டு பெண் தற்கொலை
மைசூருவில் குடும்பத்தகராறில் மருமகளை கத்தியால் குத்திவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு:மைசூருவில் குடும்பத்தகராறில் மருமகளை கத்தியால் குத்திவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியை
மைசூரு நகரம் போகாதி பகுதியை சேர்ந்தவர் மாதேவி (வயது 62). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவருக்கு சொந்தமாக அடுக்குமாடி வீடு உள்ளது. அந்த வீட்டின் கீழ்தளத்தில் மாதேவி இருந்தார்.
மேல்தளத்தில் அவரது மகனும், மருமகள் வேதவதி (35) என்பவரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாதேவிக்கும், வேதவதிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். அவரது மகன் தலையிட்டு, சண்டையை விலக்கிவிட்டு 2 பேரை சமாதானம் செய்வது வழக்கம்.
மருமகளுக்கு கத்திக்குத்து
இந்த நிலையில் நேற்று காலையும் மாமியார், மருமகள் இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உண்டானது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த மாதேவி சமையலறையில் உள்ள கத்தியை எடுத்துவந்து மருமகள் என்று பாராமல் வேதவதியின் வயிற்றுப்பகுதியில் குத்தினார். இதனால் வேதவதி வலியால் அலறி துடித்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அவரது கணவர் ஓடிவந்தார்.
அப்போது மனைவி, கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர், மனைவி வேதவதியை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் ஆத்திரத்தில் மருமகளை கத்தியால் குத்திவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் மாதேவி இருந்துள்ளார். மேலும் போலீசாரின் கைது நடவடிக்கைக்கும் பயந்து இருந்துள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருந்த மாதேவி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வேதவதியை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு அவரது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தாய் மாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்த சரஸ்வதிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
போலீஸ் விசாரணையில் மருமகளை கத்தியால் குத்திவிட்டோமே என்ற குற்றஉணர்ச்சியிலும், போலீசுக்கும் பயந்து மாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story