கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி தஞ்சையில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ்சின் மேற்கூரையில் ஏறி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்;
விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி தஞ்சையில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ்சின் மேற்கூரையில் ஏறி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அருகே டாக்டர் அம்பேத்கர் அரசு மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தற்போது 70 பேர் தங்கி உள்ளனர். விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும், சுகாதாரமான முறையில் உணவு வழங்க கோரியும் விடுதியின் முன்பு தஞ்சை வல்லம் நம்பர்1 சாலையில் கல்லூரி மாணவர்கள் திடீரென நேற்றுகாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜூன் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமி முன்னிலை வகித்தார். மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில மாணவர்கள் அரசு பஸ்சின் மேற்கூரையில் ஏறி நின்றும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் பஸ்சிற்கு கீழ் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, துணை கலெக்டர் கண்ணையன், தாசில்தார் மணிகண்டன், துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவர்கள் தரப்பில், விடுதி அறையில் கதவு, ஜன்னல்கள் உடைந்து காணப்படுகிறது. பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. கட்டிடங்களுக்கு வர்ணம் பூசப்படவில்லை என தெரிவித்தனர். மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த அதிகாரிகள், உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இன்னும் 10 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.
புதிய தலையணை, போர்வை
இதை ஏற்று மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நடந்த இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் உறுதியளித்தபடி மாணவர் விடுதிக்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து தரப்பட்டதுடன், புதிய தலையணை, போர்வை ஆகியன மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், உடனடியாக பொறியாளர் ஒருவரை நிரந்தரமாக நியமித்து, ஜன்னல், கதவு, கழிப்பறை உள்ளிட்ட மற்ற அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story