வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு


வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு
x
தினத்தந்தி 30 Sept 2021 5:45 AM IST (Updated: 30 Sept 2021 5:45 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ரெயில்வே ஸ்டேசன் தெருவில் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வந்தவர் சேகர் (வயது 39). இவருக்கு பாரதி (33) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று கடையில் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி சேகர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி- சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ரவுண்டானா அருகே வாட்டர் சர்வீஸ் உள்ளது. இங்கு 4 சக்கர வாகனங்களை தண்ணீரால் சுத்தப்படுத்தி தருகின்றனர். இந்த நிறுவனத்தை அருண் என்பவர் நடத்தி வருகிறார். இவர் நடத்திவரும் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் துளசிராமன் (வயது 28) என்பவர் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை துளசிராமன் வாகனங்களை கழுவுவதற்கு வாட்டர் சர்வீசில் இருந்த ஸ்விட்ச்சை போடும் போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து கீழே விழுந்தார்.

அங்கு இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துளசி ராமனுக்கு 15 மாதத்திற்கு முன்னர் திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது. தகவல் கிடைத்ததும் துளசிராமனின் உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story